கோவையில் கணிணி நிறுவனம் மூடப்பட்டதால் மூவாயிரம் இளம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (29.01.2025) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், கே.சாமுவேல்ராஜ், க.சுவாமிநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கோவையில் கணிணி நிறுவனம் மூடப்பட்டதால் மூவாயிரம் இளம் தொழிலாளர்கள் வேலையிழந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்த தீர்மானம் பின்வருமாறு:
கோவை மாநகரின் இருபகுதிகளில் போகஸ் எஜூமேடிக்ஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் கணிணி வழியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அமெரிக்க மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியினைச் செய்து வந்துள்ளது. இதில் சுமார் 3000 இளம் ஆண் – பெண் தொழிலாளர்கள் 5 ஆண்டு முதல் 15 ஆண்டு வரை வேலை செய்து வந்துள்ளார்கள்.
இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி அந்நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் மின்னஞ்சல் மூலமாக நிறுவனம் மூடப்பட்டதாக அறிவித்துவிட்டது. தமிழ்நாடு அரசினுடைய தொழிலாளர் நலச் சட்டங்கள் எதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. வேலை செய்து வந்த பணியாளர்களும் அவர்களது குடும்பத்தாரும் பதற்றத்துடன் இருந்து வருகிறார்கள்.
முற்றிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தெருவில் நிற்கும் இப்பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசும், தொழிலாளர் நலத்துறையும் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்திட வேண்டுமென சிபிஐ(எம்) மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.