tamilnadu

img

பெண்களை அவமதிப்போர் தேர்தலில் நிற்க, பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்!

பெண்களை அவமதிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் தலைவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
சமீபத்தில், நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர் பெண்கள் பாதுகாப்பு குறித்து மிகக் கண்டிக்கத்தக்கக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதேபோல், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நேர்முக உதவியாளராக இருந்த பொன்ராம் என்பவரும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி உள்ளார்.
மேலும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் பொதுநிகழ்ச்சியில் பெண்களை அவமரியாதையாகக் குறிப்பிட்டது தமிழகத்தில்  கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு நலத் திட்டங்கள் குறித்து பேசுகிறபோது மோசமான கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த அனைத்து சம்பவங்களும் தனிப்பட்ட சம்பவங்களாகப் பார்க்க முடியாது பெண்களை அவதூறாகப் பேசுவது என்பது அரசியல் பேச்சு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற்ற முயலும் ஆபத்தான போக்கை இது பிரதிபலிக்கிறது. இது ஜனநாயக அரசியல் சூழலில் பெண்களின் பங்கேற்பைத் தடுக்கின்றது மற்றும் அவர்களின் கண்ணியத்துக்கு நேரடி தாக்குதலாக  அமைகிறது.
இத்தகைய கருத்துக்கள், தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதிமுறைகள்  வெளிப்படையாக மீறுகின்றன. குறிப்பாக, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பாலின அடிப்படையில் தாக்குதல் நடத்துவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தகைய செயல்கள் சட்ட விரோதமானவை.
மேலும், இத்தகைய செயல்கள் பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 சட்டத்தின் கீழ் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் குற்றமாகவும்,  கருதப்பட வேண்டியவை.
பெண்களை இழிவுபடுத்தும் இந்தக் கருத்துக்கள், பாலின அடிப்படையிலான வெறுப்பைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் நோக்கத்துடனும் வெளியிடப்படுகின்றன.
உடனடியாக  இந்திய தேர்தல் ஆணையம் பெண்கள் குறித்து மோசமான கருத்துக்களை வெளியிடும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள்  மீது   தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தற்காலிக தடை விதிக்க வேண்டும்.
கடுமையான மீறல்கள் ஏற்பட்டால், அவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதியையே ரத்து செய்யும் சட்ட நடவடிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி FIR பதிவு செய்ய மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் தங்களது கட்சியினர் நிர்வாகிகளின்  இத்தகைய கருத்துக்களுக்குக்  கண்டனம் தெரிவிக்க வேண்டும். கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்க  வேண்டும்.
பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் சமத்துவம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளாகும். அரசியல் மேடைகள் பெண்களை இழிவுபடுத்தும் இடமாக மாற அனுமதிக்க முடியாது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், பெண்களை அவமதிக்கும் இந்த அரசியல் கலாச்சாரத்திற்கு எதிராக உறுதியான போராட்டத்தைத் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். என தெரிவித்துள்ளனர்.