சென்னை:
பெரும்பான்மை இந்து மக்களுக்கு விரோதி என திமுகவைச் சித்தரிக்கிறவர்கள் நடைமுறையில் பெரும்பான்மை இந்து மக்களான இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:திமுகவின் மீது அவதூறுகளை அள்ளி வீசி, கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி, இல்லாத காரணங்களை முன்வைத்து, பொல்லாத பழிகளைச் சுமத்தி நம்மை வீழ்த்திடலாம் என பகல் கனவு காண்கிறார்கள். தந்தை பெரியார் முன்வைத்த சமூக நீதி - சுயமரியாதைக் கொள்கையை தேர்தல் ஜனநாயக அரசியல் வழியில் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்துவதே அண்ணா கண்ட திமுகவின் செயல்பாடாகும். இதில் எந்த மதத்தின் மீதும் திமுகவிற்கு வெறுப்பு கிடையாது. பல மதத்தினரும் திமுகவில் அங்கம் வகிக்கிறார்கள், தம் மதம் - சாதி மறந்து யாருக்கும் சாதிப் பகை வளர்த்திடும் சகுனித்தனம் கூடாது. எவரது நம்பிக்கையிலும் பழக்கவழக்கங்களிலும் குறுக்கிடுவதில்லை.
ஆதிக்கம் என்பது பல நிலைகளைக் கொண்டது. அத்தனை நிலைகளுக்குள்ளும் ஊடறுத்து, ஒடுக்கப்படுகிற - அடக்கப் படுகிற - ஓரங்கட்டப்படுகிற மக்களின் பக்கம் நின்று அறப் போராட்டங்களை நடத்தி, ஆட்சி செய்கிற வாய்ப்பு அமைந்தபோது சட்டதிட்டங் களை வகுத்து உரிமைகளை மீட்டுத் தந்ததே திமுகவின் வரலாறு.அதன்விளைவாக தமிழ்நாட் டில் உள்ள ஒவ்வொரு குடும் பத்திலும் முதல் தலைமுறை பட்டதாரி, தொழிற்கல்வி பயிலும் வாய்ப்பு பெற்ற மருத்துவர்கள் - பொறியாளர்கள், சொத்துரிமை பெற்ற பெண்கள், திருமண உதவித் திட்டத்தால் பயனடைந்த மகளிர், அரசுப் பணிகளில் வேலை பெற்றோர், பஸ் பாஸ் கிடைக்கப்பெற்று கல்வி பெற்ற இளைஞர்கள், இலவச மின்சாரத்தால் வாழ்வு செழித்த விவசாயிகள், வரிச் சுமை குறைக்கப்பட்ட வணிகர்கள், புதிய தொழில் தொடங் கிய தொழில் முனைவோர்கள்.ஒழுகும் குடிசையிலிருந்து கான்க்ரீட் வீட்டுக்கு மாறிய ஏழை - எளிய மக்கள், நல வாரியங்களால் பலன் பெற்ற அமைப்பு சாரா தொழில் செய்யும் பாட்டாளிகள், தங்களுக்கான உரிமைகள் பெற்ற மாற்றுத் திறனாளிகள், சமூக அங்கீகாரம் பெற்ற திருநங்கையர், மதநல்லிணக்கம் போற்றிய சிறுபான்மையினர் என அனைத்து மக்களுக்கும் பயன் விளைவித்த இயக்கமாக திமுக இருக்கிறது.69 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது சமூகநீதிக் கோட்பாட் டினை நிலைபெறச் செய்வதற்கான பெருமுயற்சி. அதில் 3.5 விழுக்காடு என்பது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு உரியது என்றால், மீதமுள்ள 65.5 விழுக்காடு மொத்தமும் பெரும்பான்மை மதமான இந்து மதத்தைச் சேர்ந்த சகோதர - சகோதரிகளின் வாழ்வு மலரவும் உயரவும் காரணமாக அமைந்தது.
கிராமப்பூசாரிகள் நலனுக்காக வாரியம் அமைக்கப் பட்டது. தமிழ் வழிபாட்டு முறைக்கு முன்னுரிமை தரப் பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்டவன் சன்னதியில் அனைவரும் சமம் என்கிற அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் கொண்டு வரப்பட்டது.இப்படி எடுத்துச் சொல்ல எத்தனையோ இருக்கின்ற நிலையில், நம்மை நோக்கி ‘இந்து விரோதிகள்’ என்று விமர்சனத்தை வைத்து, வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என அரதப்பழசான சிந்தனையை புதிய தொழில்நுட்பங்களின் வழியே புத்தம் புதிய காப்பியாக ரிலீஸ் செய்து பார்க்கிறார்கள்.பொதுமக்களின் கவனத் தைத் திசை திருப்பும் இத்தகைய சதிவேலைகளைச் செய்தபடியே, பெரும்பான்மை இந்து மக்களின் எதிர்கால வெளிச் சத்தை இருட்டாக்கிடும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்திடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.