tamilnadu

img

தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டுச் சர்க்கரைக்கு புவிசார் குறியீடு!

தமிழ்நாட்டிற்கே உரித்தான தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரை வேளாண் விளைபொருட்களுக்கு தனித்துவ புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வேளாண்மை-உழவர் நல்த்துறை வெளியிட்டு செய்து குறிப்பில் கூறியதாவது: 
"தமிழ்நாட்டிற்கே உரித்தான தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரை வேளாண் விளைபொருட்களுக்கு தனித்துவ புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு (Geographical Indication) என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்திலிருந்து உருவாகும் ஒரு பொருளில் பயன்படுத்தப்படும் ஒரு அடையாளமாகும். அப்பொருட்கள் அவற்றின் உருவாகும் இடத்தின் சிறப்பு குணங்களைக் கொண்டதாக இருக்கும். உலகின் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், குறிப்பிட்ட இடத்தில் / பகுதியில் உற்பத்தி செய்யப்படும். பொருட்கள் அவை உருவாகும் இடத்தின் காரணமாக அவற்றின் சுவை, தரம் போன்ற சிறப்பு குணங்களைக் கொண்டு இயற்கையில் தனித்துவமானதாக விளங்குகின்றன. இத்தகைய தனித்துவமான குணங்கள் காரணமாக அவை சர்வதேச மற்றும் தேசிய அளவில் பெரும் நற்பெயரைப் பெற்றுள்ளன. வேளாண் பொருட்கள். உணவு பொருட்கள், கைவினைப் பொருட்கள், பிற தயாரிப்பு பொருட்கள். இயற்கை பொருட்கள் என பல்வேறு வகைகளுக்கு புவிசார் குறியீடு (GI) வழங்கப்படுகிறது.
2021-22 ஆண்டு முதல், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சம்பாவத்தல், இராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம், தூயமல்லி, மற்றும் கவுந்தம்பாடி நாட்டு சர்க்கரை ஆகிய 9 வேளாண் பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு தமிழ்நாடு அரசால் பெறப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு பெறப்பட்ட வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் எளிதாக்கப்படுவதுடன் அவற்றின் தேவை மற்றும் ஏற்றுமதி அளவும் அதிகரித்து, வேளாண் வணிகம் விரிவுபடுத்தப்படுவதுடன், பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு அடையவும் வழிவகுக்கும்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.