tamilnadu

திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி: கருத்துக் கணிப்பில் தகவல்

சென்னை, ஏப்.5-

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறியும் பொருட்டு பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளிடத் தொடங்கியுள்ளன.பண்பாட்டு மக்கள் தொடர்பகம் சென்னை லயோலா கல்லூரியின் முன் னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு வெள்ளியன்று (ஏப்.5) வெளியிடப்பட்டது. இதில், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில்திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளிலும், அமமுக 1 முதல் 2 தொகுதிகள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இதேபோல் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில், திமுகவுக்கு 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.இந்த மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற கூட்டணி வெற்றி வாய்ப்புகள் அதிகமாக 50 விழுக்காடு உள்ளது என்றும் எடப்பாடியின் இரண்டாவது கால ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது என்றும் மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாக 90 விழுக்காடு இளைஞர்கள் கூறியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பாஜக அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சி மிகமிக மோசமாக உள்ளது என்று 87 விழுக்காடு மக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.தேர்தல் ஆணையத்தின் தற்போதைய செயல்பாடுகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க் கட்சிகளுக்கு பாதகமாகவும் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.இந்த மக்களவை பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணம் காவி நீர், மேலாண்மை ஆணையம், ஜிஎஸ்டி, சரிந்து வரும் வேலைவாய்ப்பு, ஐடி ஊழியர்கள் பணி நீக்கம், முக்கிய பிரச்சனைகளில் மவுனம், சமஸ்கிருதம் திணிப்பு, கல்வி கொள்கை, மாட்டு இறைச்சி, சிறுபான்மை மக்களை சங் பரிவாரங்கள் உயிரோடு அடித்து கொன்றது என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.தமிழகம் மற்றும் புதுவையில் 21 ஆயிரத்து 464 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கூறியுள்ளது.