தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாகத் தமிழகத்தில் இன்று மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 1 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் ஓரிரு உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 4 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.