ஸ்கேன் இந்தியா
ஒற்றுமையின்மையின் விலை
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் சவுரப் ஜோஷி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 18 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளருக்கு 11 வாக்கு களும், காங்கிரஸ் வேட்பாளருக்கு 6 வாக்குகள் கிடைத்தன. கடந்த தேர்தல்களில் இணைந்து போட்டியிட்டு மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி - காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன. மக்களவை உறுப்பினராக காங்கிரஸ்காரர் இருக்கிறார். அவருக்கும் வாக்குரிமை உண்டு. அதையும் சேர்த்தால், கூட்டு வேட்பாளர் மேயராகியிருக்க முடியும். வாரிசு அரசியலால் முன்னுக்கு வந்துள்ள சவுரப் ஜோஷி, மேயராகத் தேர்வாகியிருக்கிறார். 2021இல் தேர்தல் நடந்தபோது வெறும் 12 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, பிற கட்சிக் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி 18 ஆக எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டுள்ளது.
பற்றாக்குறையின் விலை
இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு சராசரியாக 22 நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று மாநிலங்க ளவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. 1987ஆம் ஆண்டிலேயே, பத்து லட்சம் பேருக்கு சராசரியாக 50 நீதி பதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று சட்ட ஆணையம் தனது 120ஆவது அறிக்கையில் கோரியது. இப்போதுள்ள சராசரி கூட 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையிலேயே கணக்கிட்டுள்ளார்கள். தற்போதுள்ள மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், சராசரியான நீதிபதிகள் எண் ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறாமல், தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் நீதி வழங்குவது சாத்திய மேயில்லை என்கிறார்கள் நீதித்துறை வல்லுநர்கள்.
வெற்று அரசியலின் விலை
திரிபுரா மாநிலம் நகர்மன்ற அரங்கிற்கு சியாம பிரசாத் முகர்ஜியின் பெயரை வைக்கவிருக்கிறார்கள். மாநில பாஜக நிர்வாகிகளுக்கு அவரைப் பற்றிய விபரமே தெரியவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவின் பழைய அவதாரமான ஜனசங்கத்தின் நிறுவனரான அவர், முனைவர் பட்டம் பெற்றவர். ஆனால் அவர் மருத்துவம் பயின்றவராக பாஜகவினர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் தங்கள் தலைவரைப் பற்றிக் கட்சிக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு, நகர்மன்ற அரங்கிற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. புதிதாக ஒரு கட்டிடத்தை உருவாக்கி, அதற்குத் தங்கள் தலைவர் பெயரை வைத்து விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளலாம் என்றும் ஜிதேந்திர சவுத்ரி விமர்சித்திருக்கிறார்.
திட்டமின்மையின் விலை
சர்வதேச அளவில் உள்ள “பிசா”(சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத்திட்டம்) போன்றதொரு திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்யப் பல்வேறு வழிகள் கையாளப்படுகின்றன. சர்வதேச அளவில் நடத்தப்படும் பிசா, 15 வயது மாணவர்களின் திறனைச் சோதிக்கக்கூடியதாகும். ஒரேயொருமுறைதான் இந்தச் சோதனையில் இந்தியா பங்கேற்றது. 73 நாடுகள் பங்கேற்றதில் 72ஆவது இடம்தான் இந்தியாவுக்குக் கிடைத்தது. இதுபோன்ற பரிசோதனையை இந்தியத் தன்மைக்கு ஏற்றவாறு செய்ய வேண்டும் என்று தற்போது பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. இங்கும் மாநிலத்துக்கு மாநிலம் பாடத்திட்டம் வேறுபடும் என்பதால், ஒற்றைப் பரிசோதனைத் திட்டம் சரிவராது என்கிறார்கள் கல்வியாளர்கள்.
