உர விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர்
கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
மத்திய பாஜக அரசு உரத்தின் விலைகளை உற்பத்தி செய்யும் கம்பெனிகளே
தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதன் விளைவாக, உரங்களின்
மொத்த விற்பனை விலை கடந்த ஆண்டை விட 50 சதவிகிதம் முதல் 60
சதவிகிதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சில்லறை
விற்பனை விலையும் 50 கிலோ மூட்டைக்கு 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை
உயர்ந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு விவசாயிகள் மீதான மற்றொரு
கொடூரமான தாக்குதலாகும்.
ஏற்கனவே, விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை நிறைவேற்றி
விவசாயத்தை கார்ப்பரேட் கொள்ளையடிக்கும் துறையாக மாற்றியுள்ளது. அதை
எதிர்த்து விவசாயிகள் கடந்த ஐந்து மாத காலமாக வரலாற்று சிறப்புமிக்க
போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளை மேலும்
சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் உரத்தின் விலைகளை உயர்த்தி இருப்பது
வன்மையான கண்டத்திற்குரியது.
மத்திய அரசு டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் ஏற்கனவே (பட்ஜெட்டில்)
உயர்த்தியது. இதனால், டீசல் என்ஜினை பயன்படுத்தி விவசாயம் செய்யும்
விவசாயிகளின் உற்பத்தி செலவு அதிகரித்தது. தற்போது உரவிலை உயர்வு
காரணமாக உற்பத்தி செலவு மேலும் அதிகரித்து விவசாயிகள் கடுமையான
பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே, உடனடியாக உரவிலை உயர்வை ரத்து செய்ய
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
விவசாயிகள் மீதான மத்திய அரசின் அடுக்கடுக்கான தாக்குதல்களுக்கு எதிராக
கண்டனக் குரலெழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில
செயற்குழு கட்சி அணிகளை கேட்டுக் கொள்கிறது.