சென்னை, மே 9-கோவை மருத்துவமனையி லுள்ள லாட்டரி அதிபரின் உதவியாளர் உடலைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் காசாளர் பழனிசாமியிடம் வருமான வரி சோதனை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இந்தநிலையில் பழனிச்சாமி கடந்த 3 ஆம் தேதி காரமடை அருகே வெள்ளியங்காடு குளத்தில் பிணமாகக் கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். இந்தநிலையில் பழனிச்சாமியின் மகன் ரோகின் குமார் தனது தந்தை பழனிச்சாமி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், மறு பிரேதப் பரிசோதனை செய்யக் கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு வியாழனன்று(மே9) விசாரணைக்கு வந்தது.அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘மனுதாரரின் தந்தை பழனிச்சாமி போலீஸ் காவலிலோ, வருமான வரித் துறை அதிகாரிகளின் காவலிலோ இருந்த போது மரணம் அடைய வில்லை. அதேநேரம், பழனிச்சாமியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும் போது, வீடியோ பதிவு செய் யப்பட்டது. தற்போது ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப் பட்டது. காரமடை காவல் நிலையத்திலுள்ள வழக்கின் விசாரணை, மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.இதையடுத்து நீதிபதிகள், ‘இறந்து போன பழனிச்சாமியின் உடல் தற்போது எங்கு உள்ளது?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு உடல் கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறினார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பழனிச்சாமியின் உடலைப் பதப்படுத்தி, பாதுகாப்பாகக் கோவை அரசு மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.