tamilnadu

img

வேலைநேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் அநீதி சிஐடியு ஆவேச போராட்டம்

சென்னை,மே 10- வேலைநேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கும் அநீதிக்கு எதிர்ப்பு  தெரிவித்து மே 10 ஞாயிறன்று தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் ஆவேச போராட்டம்நடைபெற்றது.  பெரும் போராட்டத்திற்கு பின் உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட  8 மணி நேர வேலையை கொரோனா தொற்று நோயை பயன்படுத்தி முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ஐஎல்ஓ) வேலை நேரத்தை 6 மணிநேரமாக மாற்ற வேண்டும் என்று அனைத்து நாடுகளையும் வலியுறுத்துகிறது. இச்சூழலில் விஞ்ஞான ரீதியாக 6 மணி நேரமாக மாற்றுவதற்கு பதிலாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி  கொள்ளை லாபத்திற்கு வழிவகுக்கின்ற முதலாளிகளின் விருப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். மேலும் தொழிலாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த தொகையான இஎஸ்ஐ, பிஎப். போன்ற பணத்தை முதலாளிகளுக்கு கொடுக்க உத்தேசித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் அனைத்துத்துறையிலும் வேலை இழப்பு, வருமான இழப்பை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.  

விவசாயிகளின் விளைபொருட்களை விற்க முடியவில்லை.  விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. தொழிலாளர்களின் இழப்பை ஈடுசெய்ய அரசு முறையான உருப்படியான முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை.  அதே நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசுகள் வாரி இறைக்கின்றன. அதன் ஒரு பகுதியாக பாஜக ஆளும் மாநிலங்களிலும் ஒடிஷா போன்ற மாநிலங்களிலும் முதலாளிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வேலைநேரத்தை 12 மணிநேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு எதிராகவும் போராடிப்பெற்ற தொழிலாளர் உரிமைகளை பறிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியும் மே 10 அன்று தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் தொழிலாளர்கள் தங்களது வீடுகளின் முன்பு செங்கொடியுடன், கோரிக்கை அட்டைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாநிலப்பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் நெய்வேலியில் அவரது வீடு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். டிஆர்இயு சங்கத் தலைவர் ஜானகிராமன் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் ஆவேச முழக்கங்களுடன் கலந்துகொண்டனர்.