விழுப்புரம், ஏப். 21-விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுக்காவிற்கு உட்பட்டதுசிந்திப்பட்டு கிராமம். இக்கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதன்மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீற் ஏற்றப்பட்டு, மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்மோட்டார் பழுது மற்றும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டதால் கிராம மக்கள்குடிநீரின்றி கடும் அவதிபட்டனர்.இதையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பணம்வசூலித்து புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தனர்.
அதிலும் தண்ணீர் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் குடிநீர்வழங்க மாற்று ஏற்பாடு செய்யக்கோரி மனு கொடுப்பதற்காக காலி குடங்களுடன் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால்சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தங்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வளத்தி காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் விரைந்து மாற்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.