tamilnadu

தண்ணீர் லாரியில் சிக்கி சிறுவன் பலி

போரூர், மே 4-திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். மெக்கானிக். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தர்ஷன்(5), தியா(3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தர்ஷன் தனியார் பள்ளியில் யூகேஜி வகுப்பு படித்துவந்தான். கீதா சனிக்கிழமையன்று (மே 4) மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தர்ஷன், தியா ஆகிய இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்றார்.வானகரம் சிக்னல் அருகே வந்தபோது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் கீதா தனது வாகனத்தை இடதுபுறம் சாலையை விட்டு இறங்கி ஓரமாக சென்றார். மீண்டும் சாலையில் ஏற முயன்றார் .அப்போது மணலில் சறுக்கியதால் எதிர்பாராத விதமாக வாகனத்திலிருந்து மூவரும் சாலையில் விழுந்தனர். இதில் சிறுவன் தர்ஷன் வலதுபுறம் விழுந்தான். அப்போது அவ்வழியே மதுரவாயல் நோக்கி வேகமாக வந்த தண்ணீர் லாரி சிறுவன் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக தர்ஷன் உயிரிழந்தான். கீதா, மகள் தியா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். டிரைவர் ஜெய்சிங் என்பவரை கைது செய்தனர்.