tamilnadu

img

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் - சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் வலியுறுத்தல்

டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்டோர் கோரிக்கைகளில் முதலமைச்சர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும் என சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இது குறித்து சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) ஆகிய கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியதாவது:
"தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மூலம் மதுபானங்களை சில்லறை முறையில் விற்பனை செய்து வருகின்றது. கடந்த 23 ஆண்டுகளாக மதுபானங்கள் விற்பனை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து, அரசின் வரி வருமானத்திற்கு மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு பங்களிப்பை செலுத்தி வருகிறது. ஆனால், பாதுகாப்பற்ற பணிச் சூழலில் டாஸ்மாக் பணியாளர்கள் பணிபுரிந்து வரும் அவல நிலை தொடர்கிறது. கடந்த அஇஅதிமுக கால ஆட்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் அலட்சியப்படுத்தப்பட்டனர். அவர்களது பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. புதிய அரசு அக்கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் நிறைவேற்றப்படவில்லை. அதனால், தற்பொழுது பணியாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
போராடும் டாஸ்மாக் பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பல பிரிவு பணியாளர்களையும் அரசுக்கு எதிரானவர்கள் எனக் கருதி எதிர்மறையாக அணுகக் கூடாது என தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்வதோடு, போராடும் டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு, சுமூக தீர்வு காண முன் வர வேண்டும் என சிபிஐ (எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.