குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குரங்கு அம்மை பாதிப்பு 20க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு பரவி உள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் சமூகப் பரவலாக மாறும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இது வேகமாக பரவும் நோயல்ல என்றாலும், சமூக பரவலாக மாறக்கூடிய அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடல்சோர்வு உள்ளிட்டவை இருக்கும் பயணிகளின் மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என்றும், அவற்றை பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் குரங்கு அம்மை தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.