தமிழ்நாடு முழுவதும் இன்று ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பணி நிரந்தரமற்ற இந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுவனம் குறைத்தும், நிறுத்தியும் உள்ளது. இந்த நிலையில் உணவு விநியோகம் செய்ய கிலோமீட்டருக்கு 10 ரூபாய் தர வேண்டும், ஒரு ஆர்டருக்கு 30 ரூபாயும், பேட்ச் ஆர்டருக்கு 20 ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணா கூறுகையில், தமிழ்நாடு அரசு எங்களை போன்றவர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஸ்விகி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் மின்னஞ்சல் வாயிலாக ஸ்விகி நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும் எனக் கோரினார்.
தமிழ்நாடு முழுவதும் 90 விழுக்காடு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் சுமார் 10 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். எனவே, இந்த பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கோரினார்.