tamilnadu

img

சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பண பாக்கி ரூ.1854 கோடி

சென்னை:

தமிழகத்தில் கரும்பு விவசாயி களுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய பாக்கி ரூ.1854 கோடி நிலுவையில் இருக்கிறது; இதைப் பெற்றுத்தர எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் மாநில அரசு  அலட்சியம் காட்டுவதால் விவசாயி கள் கடும் துயரத்தில் சிக்கியுள்ளனர் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் கூறியுள்ளார். 


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு:

தமிழ்நாட்டில் கரும்பு விவசாயி களுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.1854 கோடி கரும்பு பண பாக்கி தர வேண்டியுள்ளது. விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்பும் மாநில அரசு கரும்பு பண பாக்கியை பெற்றுத்தரவில்லை. கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்பிகா, ஆரூரான் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை ஆகிய மூன்று ஆலைகள் 2016-17ல் அரவை செய்த கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த விலை எப்.ஆர்.பி-ஐ இரண்டு ஆண்டுகளாக தரவில்லை. ரூ.82 கோடி பாக்கி வைத்துள்ளனர். விவசாயிகள் பல போராட்டங்களை நடத்திய பின்பும் மூன்று ஆலைகளையும் மூடிவிட்டு ஆலை முதலாளி விவசாயிகளுக்கு பணத்தை தராமல் ஏமாற்றி வந்தார். 


இந்நிலையில் விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் நட வடிக்கை எடுத்து அம்பிகா ஆரூரான் உரிமையாளர் தியாகராஜன் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில் விவ சாயிகளின் பாக்கித் தொகையை வட்டியுடன் பெற்றுத்தர வேண்டுகிறோம். 


ரூ.1854 கோடி பாக்கி

2013-14 முதல் 2016-17 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு மாநில அரசு கரும்பு பரிந்துரை விலை அறிவித்ததை 24 தனியார் சர்க்கரை ஆலைகள் தரவில்லை. 3 முறை முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்ட பிறகு தனியார் முதலாளிகள் பணத்தை தர முடியாது என்று சொல்கிறார்கள் என்ன செய்ய முடியும் என்று விவசாயிகளிடம் மாநில அரசு கூறியது. 24 தனியார் ஆலைகள் ரூ.1217 கோடி பாக்கி வைத்துள்ளன. கூட்டுறவு ஆலைகளில் ரூ.207 கோடி பாக்கி உள்ளது. இந்த பணத்தை விவசாயிகளுக்கு பெற்றுத்தர மாநில அரசு சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகளை கைவிட்டுவிட்டது.


இதேபோல 2018-19 நடப்பு ஆண்டில் சர்க்கரை ஆலைகள் அரைத்த கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த விலையில் ரூ.350 கோடி பாக்கி உள்ளது. கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி 14 நாட்களில் தர வேண்டிய பணத்தை 4 மாதங்களாக தராமல் விவசாயிகளை சர்க்கரை ஆலைகள் அலைக்கழித்து வருகின்றன. இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் அதிக வட்டி செலுத்தி அவதிப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.


5ஏ(a) லாபப் பங்கையும் தரவில்லை

2004 முதல் 2009 வரை விவசாயிகளுக்கு கொடுத்திருக்க வேண்டிய லாபப்பங்கு தொகை சுமார் ரூ.240 கோடியை தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தராமல் ஏமாற்றி வந்தனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றோம். 13.2.2019 அன்று லாபப்பங்கு தொகையை தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விவசாயிகளுக்கு லாபப்பங்கு தொகையை பெற்றுத்தர நடவடிக்கை கோரி மாநில அரசுக்கு மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. விவசாயிகளின் கரும்பு பண பாக்கிக்கு மாநில அரசின் கண்டுகொள்ளாத போக்கே காரணம்.அம்பிகா ஆலை உரிமையாளரை கைது செய்து நடவடிக்கை எடுத்ததோடு கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.1854 கோடியை வட்டியுடன் மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்.


மோசடி வழக்கு பதிவு செய்க! 

ஆரூரான், அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் கரும்பு பணத்தை தராதது மட்டுமல்ல; விவசாயிகளுக்கு தெரியாமல் அவர்களிடம் வேறு காரணத்தைச் சொல்லி கையெழுத்துப் பெற்றுக்கொண்டு வங்கிகளில் ரூ.300 கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளனர்; அதை திருப்பிச் செலுத்தவில்லை. இந்நிலையில் அந்தக் கடனுக்காக வங்கி நிர்வாகம் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இப்படியாக விவசாயிகளை அடகு வைத்து கடன்பெற்று, திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மாநில சர்க்கரைத் துறை ஆணையர் அனுசார்ஜிடம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஓராண்டுக்கு முன்பே புகார் மனு அளிக்கப்பட்டது. தற்போது சர்க்கரை ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும்.இவ்வாறு டி.ரவீந்திரன் கூறியுள்ளார்.