tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் யோகாசனத்தில் மாணவர்கள் உலக சாதனை

திருவள்ளூர், ஜன.12- கும்மிடிப்பூண்டி யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த மாண வர்கள், தொடர்ந்து 10 நிமிடங்கள் பரிவர்த்த ஜானு சிரசாசனம் எனும் யோகாசனம் செய்து நோபல் உலக சாதனை படைத்தனர்.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேஷன் அமைப்பின் தமிழ்நாடு பிரிவு இணைந்து, யோகா உலக சாதனை நிகழ்வை நடத்தினர்.    கும்மிடிப்பூண்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் தலைமையில் நடந்த நிகழ்வில், இந்திய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பின் தேசிய செய லாளர் டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன் சிறப்பு அழைப்பாள ராக பங்கேற்றார்.  ஸ்ரீ சங்கரி யோகா மையத்தின் நிறுவனர் சந்தியா, நோபல் உலக சாதனை தீர்ப்பாளர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் போது, யோகா மையத்தை சேர்ந்த, 90 மாணவர்கள், தொடர்ந்து, 10 நிமிடங்கள், பரிவர்த்த ஜானு சிரசாசனம் எனும் யோகாசனம் செய்து புதிய உலக சாதனை படைத்தனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இளைஞர்  வெட்டிக் கொலை

சென்னை, ஜன. 12– சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திங்களன்று அதிகாலை இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூரைச் சேர்ந்த ஆதி (20) என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி, சுசித்ரா என்பவருடன் வாழ்ந்து வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவர்களது பெண் குழந்தையைப் பார்ப்பதற்காக ஞாயிறன்று  இரவு அங்கு வந்துள்ளார். பிரசவ வார்டு அருகே மதுபோதையில் உறங்கிக் கொண்டிருந்த ஆதியை, சுசித்ராவின் கணவரான சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் அலிபாய், கார்த்திக் ஆகிய மூவர் அடங்கிய கும்பல் அதிகாலை சரமாரியாக வெட்டியது. இதில்  ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம், ஜன. 12- விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 31.12.2025 அன்றைய நிலையில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு முடித்துப் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருப்பவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாற்றுத்திறனாளிகள் ஓராண்டு காத்திருந்தால் போதுமானது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் பிப்ரவரி 28-ம் தேதி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

சத்துணவு ஊழியர் சங்க திருப்பத்தூர் கிளை துவக்கம் 

திருப்பத்தூர்.ஜன,12- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க திருப்பத்தூர் கிளை துவக்க விழா மாநிலத் துணைத் தலைவர் சுமதி தலைமையில் நடைபெற்றது.  சங்க துவக்க விழாவில் மருத்துவர் சிவராமன், மாநில பொதுச் செயலாளர் ஜெசி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டியன், பொருளாளர் ராஜ்குமார், முன்னாள் தலைவர் சேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். திருப்பத்தூர் மாவட்ட தலைவராக சங்கரி,  செயலாளராக வசந்தகுமாரி,  பொருளாளராக ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.