மாணவர்கள் அவதி
திருப்போரூர், நவ.25- செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மகளிர் உயர்நிலைப் பள்ளி ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கேளம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஞாயிறன்று (நவ.24) இரவு கனமழை பெய்தது. இதனால், கேளம்பாக்கம் - கோவளம் செல்லும் சாலையில் உள்ள குளம் நிரம்பியது. குளத்தின் உபரிநீர் கால்வாய் மூலம் கழுவேலியை சென்றடைய வேண்டும். ஆனால், உபரிநீர் வெளியேறிச் செல்லும் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், குளத்தில் இருந்து வெளியேறிய நீர் அரசு பள்ளி வளாகத்தை முழுமையாக சூழ்ந்துள்ளது. மேலும், பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் பாம்புகள் அதிகம் உள்ளது. பாம்பு கடித்து நாய் ஒன்று இறந்து கிடந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பள்ளி முழுவதும் மழை நீர் சூழ்ந்து உள்ளதால் திங்களன்று (நவ.26) பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இது தெரியாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் விடுமுறை அறிந்து பிறகு திரும்பிச் சென்றனர். இதுகுறித்து, பெற்றோர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் கூறுகையில், ‘அரசு பள்ளி வளாகம் சுற்றுச் சுவர் அமைத்து பாதுகாப்பாக இருந்தாலும், சாலையில் வழிந்தோடும் மழைநீர் பள்ளி வளாகத்துக்கு செல்லும் வகையில் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. மேலும், பள்ளிக்கு அருகில் உள்ள குளத்தின் உபரிநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் வடியாமல் பள்ளி வளாகத்தை சூழ்ந்துள்ளது. இதற்கு கால்வாய் ஆக்கிரமிப்பே காரணம்’ என்கிறார்கள். திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘அரசுப் பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், கால்வாய் அமைத்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது’ என்றனர்.