எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை குறித்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த திருவள்ளூரைச் சேர்ந்த அனுப்பிரியா (வயது 21), கடந்த மே 26-ஆம் தேதி கல்லூரியின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு அடுத்தநாள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனித் செளத்ரி (வயது 19) என்ற மாணவர் விடுதியின் பின்புறம் உயிரிழந்து கிடந்தார். இதை தொடர்ந்து, கடந்த 15-ஆம் தேதி கன்னியாகுமரியைச் சேர்ந்த தர்ஷன் (வயது 18) என்ற மாணவர், கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், மாணவர்களின் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.