சென்னை:
ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி வருமானம் இல்லாததாலும், கடன் தொல்லையாலும் ஆட்டோ தொழிலாளர்கள் தற்கொலை மரணங்கள் நிகழ்கின்றன. தற்கொலை மரணங்களைதடுத்திட தமிழக அரசு ஒவ்வொரு ஆட்டோதொழிலாளர்கள் குடும்பத்திற்கும் ரூ. 15ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இறந்தமூன்று ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்(சிஐடியு) சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
சம்மேளனத்தின் தலைவர் வீ.குமார், மாநிலப் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர்முதலமைச்சரின் இ-மெயிலுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பத்தில்உள்ளவர்களின் மருத்துவ தேவையை, உணவுதேவையை பூர்த்தி செய்ய முடியாததால் மனமுடைந்த ஆட்டோ தொழிலாளர்கள் மூன்று பேர் இக்காலத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். இந்த தொடர் மரணங்கள் ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் கடன் தொல்லை மற்றும் வருமானம் இல்லாததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளி மோகன் என்பவர் தான் மட்டும் இல்லாமல் தன் மனைவி விஜயாவுடன் சேர்ந்து 9.7.2020 அன்று தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.
ஏற்கனவே 26.06.2020 அன்று புதுக்கோட்டையில் சுப்பிரமணியன் என்ற தொழிலாளி தன்மனைவிக்கு மருந்து வாங்க பணமில்லை என்ற வேதனையில் மனம் உடைந்து, கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார்.அதேபோல் 8.06.2020 அன்று கும்பகோணத்தைச் சேர்ந்த ரகுபதி என்கிற ஆட்டோ தொழிலாளி தனது குடும்பம் நடத்தக்கூட சம்பாதித்து கொடுக்க முடியவில்லையே என்கிற வேதனையில் மூன்று கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த நிகழ்வுகள் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நூற்றுக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் தங்களது சொந்த ஆட்டோக்களை வறுமையின் காரணமாக விற்பனை செய்துவிட்டு, வேதனையோடு வாழ்ந்து வருகிறார்கள்.
எனவே தமிழக அரசானது கடும் வறுமையிலும், கடன் நெருக்கடியிலும் வாழ்ந்துவரும் ஆட்டோ தொழிலாளர்களை பாதுகாக்க மேலும் காலம் தாழ்த்தாமல், ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்குவதோடு, தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் வழங்கி குடும்பங்களை பாதுகாக்க வேண்டும் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.