உளுந்தூர்பேட்டை:
தமிழக அரசு, அனைவருக்கும் இணையவசதி கிடைத்த பின்னரே ஆன்லைன் கல்வியை வழங்க வேண்டும். அதுவரை கல்வி தொலைக்காட்சி வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆன்லைன் கல்வியால் நிகழும் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் உளுந்தூர்பேட்டை நகரச் செயலாளர் ச.சூர்யா தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.வி.ஸ்ரீபத், மாவட்ட துணைச் செயலாளர் பி.சின்னராசு ஆகியோர் பேசினர். கொரோனோ அச்சுறுத்தல் காலத்தில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தக்கூடாது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.மாணவர் நலன் கருதி தமிழக அரசு அனைத்து பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளையும் கொரோனோ தொற்று முடிந்த பின்னரே நடத்த வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களின் இலவச சேர்க்கையில் ஊழல் முறைகேடுகள் இன்றி விண்ணப்பங்களை முறையாகப் பரிசீலித்து கட்டணமின்றி மாணவர் சேர்க்கையை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.