சென்னை, பிப். 2- ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனைச் சேர்ந்தவர் வெய்ன் ராபார்ட் எலிசன். இவரது மனைவி டிஸியானா தெரசா சிமோனெல்லி. இவர்களின் மூத்த மகள் சேவியா (13). அவரது உடம்பில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனை செய்ததில், சேவியாவின் முதுகுத் தண்டுவடம் இரண்டு இடங்களில் வளைந்து இருப்பது தெரியவந்தது. ஒரு இடத்தில் இருக்கும் வளைவை மட்டும் அறுவைச் சிகிச்சை செய்து சரிசெய்ய முடியுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேவியா அனுமதிக்கப்பட்டனர். மருத்துவப் பரிசோத னையில் சேவியாவின் வளைந்த முதுகுத் தண்டுவடத்தை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனையின் எலும்பியல் துறைத் தலைவரும், முதுகெலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணருமான டாக்டர் சஜன் ஹெக்டே தலைமையிலான குழுவினர் சேவியாவுக்கு சிறிய அளவிலான துளையின் மூலம் அறுவைச் சிகிச்சை செய்து உலோகக் கருவிகளின் உதவியுடன் இரண்டு இடத்தில் வளைந்திருந்த முதுகுத் தண்டுவடத்தை சரிசெய்தனர். இதுகுறித்து டாக்டர் சஜன் ஹெக்டே கூறுகையில், ‘சேவியாவின் முதுகுத் தண்டு வடம் வளைந்து இருந்த இரண்டு இடங்களி லும் ஒரே நேரத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. சிறுமிகள் முதுகுத் தண்டுவட வளைவு பிரச்னையால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தக் குறைபாடு கடுமையான முதுகு வலியை ஏற்படுத்துவதுடன் இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை பாதிக்கும்’”என்றார்.