tamilnadu

கொரோனா பரவலை தடுக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 

சென்னை, மே 20 - கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பணிகளை விரைவுபடுத்த தமிழக அரசு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. சென்னையில் (மே 19 வரை) 7 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டு, ஆயிரத்து 922 பேர் குணமடைந்துள்ளனர். 58 பேர் இறந்துள்ளனர். தற்சமயம் 5 ஆயிரத்து 691 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களான (மே 20 நிலவரப்படி ) செங்கல்பட்டில் 615 பேர் பாதிக்கப்பட்டு 417  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 218 பேர் பாதிக்கப்பட்டு 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூரில் (மே 19வரை)571 பேர் பாதிக்கப்பட்டு 380 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் கொரோனா தொற்று கட்டுக்கடாங்கமல் செல்கின்றது. சென்னையில் சமூக பரவல் என்ற கட்டத்தில் உள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவல் நடவடிக்கைகளை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) மற்றும் இந்திய காவல்பணி (ஐபிஎஸ்) அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம அரசாணை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் ஏற்கெனவே அதிகாரியாக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்ற காவல்துறை அதிகாரிகள் மகேஷ்குமார் அகர்வால் (வடக்கு மண்டலம்), அபேஸ்குமார் (கிழக்கு மண்டலம்), அமரேஷ் புஜாரி ( தெற்கு மண்டலம்), அபாய் குமார் சிங் (மேற்கு மண்டலம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவரைத் தொடர்ந்து மாநகராட்சி தலைமையக பகுப்பாய்வு உத்திகளை கவனிக்க தொழிற்துறை ஆணையர் ராஜேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மண்டலவாரியாக இயக்குநர், ஆணையர், துறைச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளும், மாவட்ட பொறுப்புகளில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தொல்லியல் துறை ஆணையர் டி.உதயச்சந்திரன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு நகராசி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரனும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எல்.சுப்பிரமணியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.