tamilnadu

img

சிதம்பரம் கோயிலில் மாலை 3 மணிக்குள் விழாவை முடிக்க சார் ஆட்சியர் உத்தரவு

சிதம்பரம், ஜூலை 3- சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த ஆண்டிற்கான ஆனித்திருமஞ்சன விழா கடந்த 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ஆம் தேதி தேர் திருவிழாவும், 8ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் வருவார்கள். திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்கும் வகையிலும், விழா ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சார் ஆட்சியர் விசுமகாஜன் தலைமை வகித்தார். சிதம்பரம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நகராட்சி பொறியாளர் மகாதேவன், கோயில் தீட்ஷீதர்கள் பாஸ்கர், நவமணி மற்றும் மின்துறை, நெடுஞ்சாலைத் துறை, உணவு பாதுகாப்புத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, தீயணைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு விழா ஏற்பாடுகள் குறித்து பேசினார்கள். கூட்டத்தில் பக்தர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தரிசன நிகழ்ச்சியை 8ஆம் தேதி மாலை 3 மணிக்குள் முடிப்பது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பாக செய்வது. கோயிலுக்கு உள்ளே வரும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வது என்றும், 7, 8 இரு நாட்கள் சிதம்பரம் நகருக்கு உள்ளே வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்வது, சிதம்பரம் பகுதியில் 8ஆம் தேதி டாஸ்மாக் கடையை விடுமுறை அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.