tamilnadu

மயக்க மருந்து கொடுத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

காஞ்சிபுரம்,ஏப்.25-வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி தனி வீட்டில் அடைத்து வைத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், மானாம்பதி கண்டிகைஅருந்ததியர் பாளையத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. மனைவி டெல்பினா. இவர்களது மகளை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புதனன்று பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.அந்த மனுவின் விவரம் வருமாறு:-கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி, எங்கள் பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி, அற்புதராஜ் ஆகியோர் எங்களது வீட்டிற்கு வந்து என்னுடைய 16 வயது மகளை வீட்டு வேலைக்கு அனுப்புமாறு கூறினர். நான் அனுப்ப முடியாது என்று கூறிவிட்டேன். பிறகு, மீண்டும் சில நாட்கள் கழித்து அவர்கள் வீட்டிற்கு வந்து, காஞ்சிபுரத்தில் கோனேரிக்குப்பம் பகுதியில்தான் வேலை செய்யப் போகிறாள். வேலை கஷ்டமாக இருக்காது, 10 நாட்கள் வேண்டுமானால் அனுப்பிவையுங்கள், வேலை பிடிக்கவில்லைஎன்றால், திருப்பி அனுப்பி விடுகிறோம் என தெரிவித்தனர். இதை நம்பி மகளை அவர்களுடன் அனுப்பி வைத்தேன். இதனைத் தொடர்ந்து சிலநாட்கள் கழித்து வேளாங்கண்ணியின் செல்போனில் இருந்து, என்மகள் கவலையுடன் பேசினாள். உடனே நான் வேலை பிடிக்கவில்லை என்றால் வந்துவிடு எனதெரிவித்தேன். அதற்குள் இடைமறித்து, வேளாங்கண்ணி, உங்கள் மகள் நல்லமுறையில்தான் இருக்கிறாள். நான் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறி தொடர்பை துண்டித்துவிட்டார். 

பின்னர், ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவதற்காக மகளை அனுப்பிவைக்கும்படி வேளாங்கண்ணியிடம் தெரிவித்தேன். ‘உன் மகளை நீயே வந்துஅழைத்துச் செல்’ என வேளாங்கண்ணி,இருதயராஜ் இருவரும் அலட்சியமாகக் கூறினர். நான் தொடர்ந்து வலியுறுத்தியதால், ஏப்ரல் 19ஆம் தேதி என் மகளை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மறுநாள் காலை அச்சிறுப்பாக்கம் தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றேன். ஏப்.21 ஆம்தேதி வேளாங்கண்ணி வீட்டிற்கு வந்தார். மகளை வேலைக்கு அனுப்புமாறு கூறினார். ஆனால் அவள் வேலைக்கு வரமாட்டேன் என அழுதுகொண்டே சொல்லிவிட்டாள்.பின்னர் இது குறித்து மகளிடம் கேட்டபோது, கோனேரிக்குப்பம் வீட்டில் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை சொல்லி அழுதாள். ஏன் இதுவரை சொல்லவில்லை எனக் கேட்டதற்கு, ‘வெளியில் சொன்னால் நீ மட்டுமல்ல, உன்னுடைய குடும்பத்தையும் கொலைசெய்து விடுவோம்’ என மிரட்டியதாக அவர் தெரிவித்தார். காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் பகுதியில் வீடு வாடைக்கு எடுத்து அதில் என் மகளை அடைத்து வைத்துபாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வேளாங்கண்ணி, அற்புதராஜ் ஆகியோர் எனது மகளுக்கு போதை மாத்திரைகள் மற்றும் மயக்கஊசிகள் செலுத்தி சுய நினைவை இழக்கச் செய்து பலரை அழைத்து வந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட வைத்துள்ளனர். சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த அற்புதராஜ், வேளாங்கண்ணி மற்றும் அவர்களின் கூட்டாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இரண்டு தனிப்படைகள் அமைத்து தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.இது குறித்து மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வா.பிரமிளா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்தஒரு மாதத்தில் 3 பாலியல் வன்கொமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மாற்றுத்திறனாளி பெண் குழந்தை, 8 வயது பெண் குழந்தை, இதைத் தொடர்ந்து 16 வயது பெண் குழந்தையை தனி வீட்டில் அடைத்து வைத்து பலர் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் தொலைபேசியில் கேட்டபோது, “இரண்டு தனிப்படை அமைத்துள்ளோம் இரண்டு நாட்களில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம்” என்றார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் வழக்குப்பதிவு செய்வதோடு பலவழக்குகள் நின்று விடுகின்றன. காவல் துறையின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் இச்சம்பவம் குறித்து மாதர் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும் என்றார்.