‘பள்ளிகளில் தொடரும் பாலியல் துன்புறுத்தல்: தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும்?’ எனும் தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூன் 21 திங்களன்று இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் ஆர்.வைகை, மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.லெனின், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, யுனிசெப் குழந்தை பாதுகாப்பு நிபுணர் ஆர்.வித்யாசாகர், வழக்கறிஞர் உ.நிர்மலாராணி, உளவியல் ஆலோசகர் ஜாஸ்மின் வில்சன், குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் தீபா, இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட, வழக்கு நடத்திய கீதா மற்றும் அறிவுக்கரசி ஆகியோர் பேசினர்.
தனியார் பள்ளிகளுக்கும் அரசாணை பொருந்த வேண்டும்
ஆன்லைன் கல்வி முறை ஏழைகளை சென்றடையவில்லை. அண்மையில் கொரோனா பாதிப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 700 சதவீதம் அதிகரித்துள்ளது. பள்ளிகளில் ஏற்கெனவே பாலியல் புகார்கள் வந்து கொண்டுள்ளன. ஆன்லைன் கல்வியிலும் பாலியல் தொந்தரவு தர முடியும் என்பதெல்லாம் வெளிவந்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு துறைகள், நீதிமன்றம், சட்டம், காவல்துறை இருந்தும் பாலியல் புகார்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.2017ம் ஆண்டு கணக்குபடி தமிழகத்தில் 15-18 வயதில் 56 லட்சம் குழந்தைகள் இருந்தனர். அதில் 48 லட்சம் குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றனர். இவர்களில் 53 சதவீத குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கின்றனர். ஆனால் அரசாணைகள் தனியார் பள்ளிக்கு பொருந்தாது என தப்பித்துக் கொள்கின்றன.
2018-19ம் ஆண்டு தருமபுரி, கிருஷ்ணகிரியில் நடத்திய ஆய்வில் 100 பாலியல் புகார்கள் வந்தன. பாலியல் புகார் எழுந்தால் ஆசிரியரை பணி நீக்கம் செய்ய அரசாணை (தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது) உள்ளது. அதன்படி ஒருபுகாரில் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. தற்காலிக நீக்கம்மட்டுமே செய்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புகமிட்டி, புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து கண்காணிக்கவே இல்லை. போக்சோ சட்டப்படி, மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதே இல்லை.தமிழகத்தில் பாலியல் புகார்களை விசாரிக்க 16 (மகிளா)சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. அவற்றில் பலவற்றில் நிரந்தர நீதிபதிகள் கிடையாது. பாலியல் புகார்களில் பாதிக் கப்படுகிறவர்களில் 99 சதவீதம் பேர் பெண் குழந்தைகள். இத்தகைய வழக்குகளில் 3 மாதத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், லேப் ரிப்போர்ட் வருவதற்கே 10 மாதம் ஆகிறது. கீழமை நீதிமன்றங்கள் தண்டனைவழங்கினால் உயர்நீதிமன்றங்கள் வழியாக வெளியே வந்து விடுகின்றனர்.2019ம் ஆண்டு இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 50,721 வழக்குகள் பதியப்பட்டன. அந்த ஆண்டு வரையில் இருந்த மொத்த நிலுவை வழக்குகள் 1.60 லட்சம். இதில் 5326 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டன. அதில் 3ல் 2 பங்கு வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மாற்றம் காண, ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை வகுத்து வெளிப்படையாக குழந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளியில் உள்ள புகார் பெட்டிகளை ஒரு குழு வைத்து திறக்க வேண்டும். புகார் அளிக்கஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். பாலியல் கல்வி கற்பிக்க வேண்டும். அரசாணைகள் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில் வெளியிட வேண்டும்.கேரளாவில் உள்ளது போல் ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகள் மன்றம் (சில்ரன்ஸ் கிளப்) அமைக்க வேண்டும். பாலியல் புகார்கள் மீதான வழக்குகள் கிடப்பில் இருப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஆய்வு நடத்த வேண்டும்.
வித்யாசாகர், குழந்தை பாதுகாப்பு நிபுணர், யுனிசெப்
********************
மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்
குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு நிகழ்ந்தால் மனஅழுத்தம், மனச்சோர்வு, பதற்றம், அச்சஉணர்வு, மனச்சிதைவு ஏற்படும். அதிர்ச்சியான தாக்குதல், அருவருப்பு காரணமாக முகம், கை, உடல்களை அடிக்கடி கழுவுவார்கள். குழந்தைகளுக்கு உடலின் சில பகுதிகள் பிடிக்காமல் போகும் அல்லது உடல் மீது அதீத கவனம் செலுத்துவார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மனரீதியான சிகிச்சை அளிக்காவிட்டால், வளர்ந்த பிறகும் அதன் பாதிப்பு இருக்கும்.ஒரு பாலியல் புகார் பிரச்சனை எழுந்து, முடிந்துவிட்டது என்று விடக்கூடாது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மன ரீதியாக தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும். மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கும். தனியாக மூலையில் சென்று உட்கார்ந்திருக்கும். பாதி தூக்கத்தில் எழுந்து அழும். எனவே, பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரம் ஒதுக்கிபேச வேண்டும். குழந்தைகளுக்கு யார் மீது நம்பிக்கையுள்ளதோ அவர்களிடம்தான் பேசுவார்கள். அதற்கேற்ற சூழலை உருவாக்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். குழந்தைகளை அணுகும் முறை குறித்துஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், மாணவர்களுக்கு வயது வந்தோருக்கான பாலின விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், பாலின தொந்தரவு குறித்து கற்றுத்தர வேண்டும், புகார் பெட்டிகள் வைப்பது தோல்வியடைந்த திட்டம்.உடல் நலத்திற்கு சிகிச்சை கொடுப்பது போன்று மன நலத்திற்கும் தர வேண்டும்.
ஜாஸ்மின் வில்சன், உளவியல் ஆலோசகர்
********************
பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை
பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்தால் குற்றவாளியை பாதுகாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் நடக்கிறது. பாலின சமத்துவம், பெண் விடுதலை குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். போக்சோ சட்டம் குறித்து காவல்துறை, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவல் துறையினருக்கு பாலின சமத்துவம் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். குடும்பத்தில் ஆண் - பெண் பிள்ளைகளை சமமாக நடத்த வேண்டும். பெண்கள் குறித்த பிற்போக்கான பார்வையை மாற்றும் வகையில் படைப்பாளிகள் படைப்புகளை உருவாக்க வேண்டும். ஈவ்டீசிங் செய்தால்தான் அவர் ஹீரோ என்பன போன்ற கருத்தாக்கங்களை தவிர்க்க வேண்டும்.
பி.சுகந்தி, பொதுச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
********************
சமூக விழிப்புணர்வு பேரியக்கம் தேவை
குழந்தைகளின் உரிமைகள், அவர்கள் சம்பந்தமான பிரச்சனைகள் பல பரிமாணங்களை கொண்டது. பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிற சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனியச் செய்துள்ளது.
மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்களை கொண்டது இந்தியா. பாலின விகிதத்திலும் ஏற்றத்தாழ்வு உள்ளது. குழந்தை தொழிலாளர் முறை உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்; திருமணங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் ஆண்டுதோறும் 7 முதல் 35 லட்சம் குழந்தைகளை கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்; உடல் உறுப்புகளை திருடுகின்றனர். உலகில் உள்ள ஒட்டுமொத்த குழந்தை தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளதாக ஐஎல்ஓ தெரிவிக்கிறது. குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, பராமரிப்பு சட்டங்கள் ஏட்டளவிலேயே உள்ளன.
சென்னையில் பத்மசேஷாத்திரி பள்ளியில் எழுந்த பாலியல் புகார் தொடர்பாக ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து அதேபள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பாலியல் புகார்களை பெற்று விசாரிக்க நியமிக்கப்பட்ட காவல்துறை பெண் அதிகாரியிடம் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. சென்னையிலிருந்து மட்டும் 22 புகார்கள் சென்றுள்ளன.சுசில்அரி பள்ளியின் ரகசிய அறையில் வைத்து சாமியார் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தாளாளர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்களைப் போல் குழந்தைகளை பாதுகாக்காமல் காமவேட்டை நடத்தியிருப்பது அவமானகரமானது. பாலியல் குற்றங்களை தடுக்க போக்சோ சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் அரசு புள்ளி விவரப்படி 99 சதவீத பாலியல் புகார்கள் பதியப்படுவதில்லை. இந்த கொடுமைகளை தடுக்க, சமூக விழிப்புணர்வு தேவை. இது மாணவர்கள், பெற்றோர்களின் பிரச்சனையல்ல; சமூகத்தின் பிரச்சனை.
குற்றவழக்குகளில் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு மாறாக காவல்துறை உள்ளிட்ட அமைப்புகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சென்று விடுகின்றன. அருப்புக்கோட்டை மாணவிகள் வழக்கு கிடப்பில் கிடக்கிறது. மாணவிகள் பல ஆண்டுகளாக புகார் கொடுத்தும் பத்ம சேஷாத்திரி பள்ளி மறைத்து வந்துள்ளது. புகார்களை மூடி மறைப்பதில் பல சக்திகள் ஈடுபடுகின்றன. போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காக ஒன்றிரண்டு ஜனநாயக அமைப்புகள்தான் உள்ளன.
கருத்தரங்கில் பெறப்பட்ட கருத்துக்களை சாசனமாக தொகுத்து முதலமைச்சரிடம் அளித்து நடவடிக்கை எடுக்க கோருவோம். இந்த தளத்தில் பணியாற்றுவோரை கொண்டு சமூக விழிப்புணர்வு பேரியக்கம் நடத்தப்படும்.
கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
********************
166ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை தேவை
பாலியல் சீண்டல், துன்புறுத்தல்கள் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவம், கண்ணியமாக வாழ்தல் போன்றஅடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. பாலியல் வன்முறைகள் குழந் தைகளின் எதிர்கால கனவை, வாழ்வை சிதைத்து விடுகிறது. குழந்தைகள் மீது வன்முறை நிகழ்ந்தால் அவர்கள் தொடர்புடைய அரசு அமைப்புகள்தான் பொறுப் பேற்க வேண்டும். பாலியல் வன்முறைகளை தடுப்பதில் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அமைப்புகளுக் கும் பொறுப்பு உள்ளது.பள்ளிகளில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் மாணவிகள் பெரும்பாலும் ஏழையாகவும், தனித்துவாழும் பெண்களின் குழந்தைகளாகவும் உள்ளனர். போக்சோ சட்டப்படி தகவல் தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். மாணவிக்கு தொந்தரவு நடந்ததை தலைமைஆசிரியரிடம் தெரிவித்த சக ஆசிரியரை கல்வித்துறை தற்காலிக நீக்கம்செய்கிறது.
பள்ளியில் புகார் எழுந்தால் கிராமத்து பெரிய மனிதர்கள் கூடி, சாதி,பள்ளி, கிராமத்தின் கவுரவம் கெட்டுவிடும் என மூடி மறைக்கின்றனர். பலவழக்குகளில் காவல்துறை அராஜகமாக அணுகுகிறது. போக்சோ சட்டவிதிகளுக்கு மாறாக காவல்துறையினர் குழந்தைகளிடம் விசாரணை நடத்துகின்றனர். காவல்துறை கடமையை செய்ய தவறினால் ஐபிசி 166ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இதுவரை ஒரு காவலர் மீதுகூட அந்த பிரிவின் கீழ் வழக்கு பதியப்படவில்லை. சட்டம் இருந்தும் செயல்படாமல் உள்ளது. எனவே, 166ஏ பிரிவை அரசு செயல்படுத்த வேண்டும்.
பள்ளி நிர்வாகம், மாணவர்கள், ஊழியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், நீதித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை போன்றோருக்கு பாலியல் நிகர்நிலை பயிற்சி வழங்க வேண்டும். குற்றம் நடந்தால் பள்ளி நிர்வாகத்தை பொறுப்பாக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட காலத்தில் போக்சோ சட்டத்தின் கீழ்பதியப்பட்ட வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், பதிவாளரும் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.மாவட்ட கல்வித்துறை முறையாக தலையிட்டு ஒரு பிரச்சனையை தீர்த்தது என்று சொல்வதற்கில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச் சர் இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். கருத்தியல் தளத்தில் சமத்துவக் கருத்துக்களை பரப்ப வேண்டும். குற்றவாளிகளை நியாயப்படுத்துவதை கைவிட வேண்டும். சிவங்கர் பாபா சாமியார் மாதிரிஅதிகார உயர்நிலையில் இருப்பவர் கள் தவறு செய்தால் அத்தகைய பள்ளிகளை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து கொள்கைமுடிவு எடுக்க வேண்டும். ஊடகங்களில் ஒரு நிமிடம் சமூக பொறுப்பு விளம்பரங்களை செய்ய அரசு வற்புறுத்த வேண்டும்.போக்சோ சட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங்கப்பட்ட 100 வழக்குகளை ஆய்வு செய்தால், எங்கெங்கு தவறுநிகழ்ந்துள்ளது என்பது தெரிந்துவிடும். அதற்கேற்ப அரசு மாற்றங் களை கொண்டு வரலாம்.சாதி, மதம் என பாகுபாடு கொண்டவலதுசாரி அரசியல் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. அது வைக்கும் பிற்போக்கு கண்ணோட்டம், கொள் கைகளை எதிர்த்த போராட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தைகள் மீதான வன்முறையை பார்க்க வேண்டும். அசமத்துவத்தை அதிகப்படுத்துகிற எந்த ஒரு நடவடிக்கையையும் ஏற்க முடியாது என்ற நிலையில் இருந்து பாலியல் துன்புறுத்தலை அணுக வேண்டும்.
உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர், சிபிஎம்
********************
மரண தண்டனை தீர்வு அல்ல
பத்மசேஷாத்திரி பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ள குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுசமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளி நிர்வாகங்கள் புகார்களை கண்டுகொள்ளாத சூழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை போன்ற நகரங்களில் இந்த நிலையென்றால், சாதிய சமூக கட்டமைப்பு கொண்ட கிராமங்களில் உள்ள குழந்தைகளின் நிலை என்ன? பள்ளிகள் ஆணவத்தோடு நடந்து கொள்ளும் சூழலில் ஏழை மாணவர்களின் நிலை என்ன?பாலியல் தொந்தரவு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கவில்லை. பாலியல் புகாரில் ஈடுபட்ட குற்றவாளியை பள்ளி நிர்வாகம் வெளியேற்றினால், வேறு இடத்தில் வேலையில் சேர்ந்து அதே குற்றத்தை செய்கின்றனர். எனவே, பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பின்புலத்தையும் கொண்ட பதிவேடு உருவாக்க வேண்டும். கல்வி நிலையங்களில் பின்புலத்தை ஆய்வு செய்த பிறகே வேலை வழங்க வேண்டும்.
2018ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்து மரண தண்டனை அல்லது 20 வருட தண்டனை என்ற பிரிவை சேர்த்தார்கள். கடுமையான தண்டனையை கொடுக்க நீதிபதிகள் தயங்கி, வழக்கை காலதாம
தம் செய்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கும் அழுத்தம்உருவாகிறது. நீதி கிடைப்பது தாமதமாகிறது. எதற்கெடுத்தாலும் மரண தண்டனை என்றால், குற்றம் குறைந்துவிடாது. தண்டனை கடுமையானால் தீர்ப்பு கிடைக்காது. ஒன்றிய அரசு அதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள சட்டங்களை சரியாக பயன்படுத்த வேண்டும். சமூகத்தில், பள்ளியில் எவை எவை குழந்தைகளுக்கான உரிமைகள்? அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று அரசு அறிவிக்க வேண்டும். பள்ளி அளவில் குழந்தைகளை கண்காணிப்பதற்கான அமைப்பை உருவாக்க வேண்டும். குற்றங்களை பெற்றோர்கள் மறைக்கக் கூடாது. இவை அனைத்தும் ஒன்றுபட்ட செயல்படும்போதுதான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.
கனிமொழி எம்.பி., திமுக மகளிரணிச் செயலாளர்
********************
பாலியல் வன்முறை தடுப்புச்சட்டம்
பள்ளிகளிலிருந்து ஆண்டுதோறும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆசிரியர் பணி அறப்பணி என்பதை மறந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர். சமூக பொறுப்பின்றி உள்ளனர். பாலியல்
துன்புறுத்தலை வெளிப்படுத்துவது அவமானம்; மதிப்பெண் குறைந்துவிடும்; பள்ளியிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். பெற்றோர்கள் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விடுவார்கள் போன்ற காரணங்களால் மாணவிகள் மறைத்து விடுகின்றனர்.
பெண்களை போகப்பொருளாக பார்க்கும் பார்வை உள்ளது. பாலியல் குற்றங்களை தடுக்க ஏராளமான சட்டங்கள்இருந்தும், குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. சட்டங்களால் குற்றங்களை குறைக்க முடியுமே தவிர, முற்றாக தடுக்கமுடியாது. சமூகத்தில் ஆண்-பெண் சமம் என்கிற புரிதலை ஏற்படுத்த வேண்டும்.போக்சோ சட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை ஆய்வு செய்த நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான குழு, 100 வழக்கு உள்ள மாவட்டங்களில் விரைவு நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டது. தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளில் இதுவரை 689 மட்டுமே விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும். பள்ளிகளில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
பாடத்திட்டத்தில் பாலியல் சமத்துவக் கல்வியை சேர்க்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும். பெற்றோர், மாணவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்களை கொண்ட கண்காணிப்புக் குழு அமைத்து, புகார்களை விசாரிக்க வேண்டும். தமிழ்நாடு மாநில அளவில் ஒரு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். சமூகத்தில் சமத்துவப் பிரச்சாரத்தை செய்ய வேண்டும். இவற்றின் மூலமே பாலியல் வன்முறைகளை ஓரளவு தடுக்க முடியும்.
வீ.மாரியப்பன், மாநிலச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்
********************
பாலியல் குற்றத்திற்கு பள்ளிதான் பொறுப்பு
பாலியல் புகார்கள் வெளியே வந்தால் அவப் பெயர் ஏற்படும் என்று பள்ளிகள் அவற்றை மறைக்கின்றன. இதில் மாற்றம் வர வேண்டும். பாலியல் தொந்தரவு என்பது மனித உரிமை மீறல், பாலின உரிமை மீறல் என்பதாக புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் புகார் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகள் அறிவித்து, பயிற்சி கொடுத்தால் மாற்றம் கொண்டு வர முடியும். தவறு நிகழ்ந்தால் புகார் கொடுக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். பாலியல் குற்றம் நிகழ்ந்தால் அதற்கு அந்த பள்ளிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவித்தால் 50 சதவீத குற்றங்கள் குறையும்.
பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர் அறைக்கு முன்பு புகார் பெட்டி வைப்பதால் பயனில்லை. பள்ளி அறைகளில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும். ஆன்லைன் பாலியல் தொந்தரவை தடுக்க புதிய மென்பொருட்களை உருவாக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் இல்லாமல் மனநல ஆலோசகர் குழந்தைகளுடன் உரையாட வேண்டும். நீதிமன்றங்கள் குறிப்பிட்ட நாட்களை நிர்ணயித்து போக்சோ வழக்குகளை விசாரிக்க வேண்டும். குற்றம் நடப்பதற்கு முன்பே தடுக்க வேண்டுமெனில், பள்ளிகளில் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும். சிபிஎஸ்இ உள்ளிட்ட கல்வி வாரியங்கள் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஆர்.வைகை, மூத்த வழக்கறிஞர்
தொகுப்பு: செ.கவாஸ்கர்