tamilnadu

img

பெண் ஊழியர்களுக்கு இருக்கை வசதி... தமிழக அரசு சட்டத் திருத்தத்திற்கு சிஐடியு வரவேற்பு....

சென்னை:
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : 

கடை மற்றும் நிறுவனங்களின் சிப்பந்திகளுக்கு இருக்கை வசதி செய்து தருகிற தமிழக அரசின் சட்டத்திருத்தத்தை சிஐடியு மகிழ்ச்சி யோடு வரவேற்கிறது. துணிக்கடை,நகைக்கடை, மால்கள், பல்பொருள் அங்காடி போன்ற பெரியவர்த்தக நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். ஏராளமான இளம் பெண்கள் இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி, வேலை நேரச் சட்டம் போன்ற எதுவும் அமலாவதில்லை. 12 மணி நேர வேலை செய்யும் அவர்கள் வாடிக்கையாளர் இல்லாத நேரத்தில் கூட அவர்கள் உட்கார இருக்கை வசதி இல்லை. அவர்கள் மொத்தவேலை நேரமும் நின்றபடியே வேலை செய்ய வேண்டும். இது பலவிதமான உடல்ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது. நரம்புத்தடித்தல், கர்ப்பப்பை பாதிப்பு போன்ற மோசமான விளைவுகளும் சிறு வயதிலேயே ஏற்படுகின்றன. கேரள அரசு 2017ஆம் ஆண்டிலேயே இந்த வகையான பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தரவேண்டும் என விதி செய்துவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு சிஐடியுவும், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தின. அரசிடம் தொடர்ந்து முறையீடுகளை செய்தன. மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தினத்திற்கும் இந்தக் கோரிக்கை பிரதான கோரிக்கையாக்கப்பட்டது.

திமுக அரசு வந்தவுடன் சிஐடியு கொடுத்த கோரிக்கைகளில் இதுவும் ஒரு பிரதான கோரிக்கையாகும். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சரிடம் தனியாகவும் முறையிட்டோம். அவர் இதைப் பரிசீலிக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார். அதற்கேற்ப தற்போது கடை மற்றும் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தருவதற்கான சட்டத்திருத்தம் செய்வதாக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. சிஐடியு கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்திருக்கும் தமிழக அரசிற்கும், முதல்வருக்கும் நன்றி.