சென்னை:
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்திய ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமாறு:-
ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டமானது இந்தியக் குடியுரிமை விஷயத்தில் மதத்தை ஓர் அம்சமாகப் புகுத்துகிறது. இது நமது அரசியல் சாசனத்தின் ‘மதச்சார்பற்ற குடியரசு’ எனும் கோட்பாட்டிற்கே விரோதமானது.அதுமட்டுமல்ல, அப்படி மதத்தைப் புகுத்தியதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. ஆறு மதங்களைக் குறிப்பிட்ட இந்த திருத்தச் சட்டம் இஸ்லாமை மட்டும் விட்டு விட்டது. இதனால் பக்கத்து நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுக்கப்படுகிறது.
அகதிகளை மதரீதியாக மட்டுமல்லாது, பூகோளரீதியாகவும் பாகுபடுத்தும் வேலையை இந்தச் சட்டம் செய்துள்ளது. அதாவது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து வருவோருக்கு மட்டுமே குடியுரிமை எனச் சொல்லி பர்மாவும் இலங்கையும் சேர்க்கப்படவில்லை. இதனால் இலங்கையிலிருந்து வந்துள்ள அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காதபடி செய்யப்பட்டுள்ளது. ஆக எப்படிப் பார்த்தாலும் அநீதியான திருத்தச் சட்டமாக உள்ளது இது. எனவே இதை எதிர்த்து இந்தியா முழுக்க மகத்தான போராட்டங்கள் எழுந்தன.
தமிழகத்தில் மக்கள் ஒற்றுமை மேடை நடத்திய பல லட்சம் பேர் பங்கு கொண்ட மாநிலந் தழுவிய மனிதச் சங்கிலி இயக்கமும், பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட சென்னை மாநாடும் குறிக்கத் தக்கவை. அந்த மாநாட்டில் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கு கொண்டு இந்தச் சட்டத்தை எதிர்த்து வன்மையாகப் பேசினார்.திமுக தனது தேர்தல் அறிக்கையில் தான் ஆட்சிக்கு வந்தால் இந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனும் உறுதிமொழி தந்தது. அதற்கேற்ப தற்போது சிஏஏ திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை முழுமனதோடு வரவேற்கிறது. அதை முன்மொழிந்து பேசிய முதல்வரை பாராட்டுகிறது.
சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் தமிழக மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கையாக உள்ளது. இதற்கு மதிப்பளித்து இந்த அநியாய சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மோடி அரசை மேடை வலியுறுத்துகிறது. இனியும் மறுத்தால் அது தமிழக மக்களின் நியாயமான எண்ணத்தை அவமதிப்பதாக இருக்கும், மற்றொரு போராட்ட பேரலையை அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் மேடை எச்சரிக்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.