tamilnadu

img

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்.... தமிழக மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசுக்கு சட்டமன்றம் வெளிப்படுத்தியது... விவசாயிகள் சங்கம் வரவேற்பு....

சென்னை:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து  செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.தமிழக மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசுக்கு சட்டமன்றம் வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

விவசாயிகள் நலன்களுக்கு விரோதமாகஇந்திய ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றி யுள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களை யும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 28 சனிக்கிழமையன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மகிழ்வுடன் வரவேற்கிறது.திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல்அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மற்றொரு வாக்குறுதியை இதன் மூலம் நிறை வேற்றியிருக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த நடவடிக்கை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கடந்த 10 மாத காலமாக போராடிக் கொண்டிருக்கிற நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை இந்த தீர்மானத்தின் மூலம் இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும் வேளாண்விரோத சட்டங்களுக்கு எதிராக போராடியவிவசாயிகள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள தற்கும் தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த தீர்மானத்தை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர்  முன்மொழிந்த போது பாஜக , அதிமுக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளதன் மூலம் தாங்கள் விவசாயிகளுக்கு விரோதமானவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் அதிமுக, பாஜகவும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும், இன்னமும் பாஜகவின்  துணை அமைப்பாகத்தான் அதிமுக செயல்பட்டு வருகிறது என்பதையே வெளிநடப்பின் மூலம் அதிமுக தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளது. அதிமுகவின் இந்த அணுகுமுறை தமிழ்நாட்டின் நலனுக்குஉதவ செய்யாது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.ஏற்கனவே, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இந்திய ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளனர். பல்வேறு மாநில மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை திரும்பப் பெற இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.