tamilnadu

தண்ணீர் திறக்க உத்தரவு: விவசாயிகள் சங்கம் வரவேற்பு

சென்னை, மே 28-காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் மே 28 அன்று புதுதில்லியில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக் கையை ஏற்று கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில், மே மாத இறுதிக்குள் 2 டி.எம்.சியும், ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.2 டி.எம்.சி தண்ணீரையும் தாமதமில்லாமல் தமிழகத்திற்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கர்நாடக மாநில அரசையும், ஆணையத்தையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. கர்நாடக அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் குறுவை சாகுபடி பணிகளை துவக்குவதற்கு இதை உத்தரவாதப்படுத்துவது அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.  தமிழ்நாடு அரசு, குறுவை சாகுப டிக்கு தேவையான தண்ணீர் கடைமடை வரை சென்று சேரும் வகையில் வரத்து வாய்க்கால்களையும், கிளை வாய்க்கால்களையும் போர்க் கால அடிப்படையில் தூர்வாருவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது. இப் பணியை மேற்கொள்ளவில்லை என் றால் தண்ணீர் வந்தாலும் பல பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் சென்று சேர முடியாத நிலை ஏற்படும் என்பதை கவனப்படுத்துகிறோம். காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை உறுதியாக அமல் படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து செயல்பட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது என்று அறிக்கை ஒன்றில் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ. சண்முகம்தெரிவித்திருக்கிறார்.