ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்த வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறியது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்தது. இது வக்பு சொத்துக்களைச் சூறையாடுவதற்கான சதித் திட்டம் என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னணியில், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழுவில் ஆய்வு நடத்தப்பட்டு, பின்னர் பா.ஜ.க கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் அளித்த 14 திருத்தங்களை மட்டுமே பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவால் ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் முன்வைத்த 44 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது.
வக்பு சட்டத்தைத் திருத்துவதன் மூலமாக, மத்திய வக்ஃபு கவுன்சில் மற்றும் மாநில வக்ஃபு வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இது வக்பு நிறுவனங்களின் சுயாட்சியைப் பாதிக்கும். அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்ஃபு சொத்து, இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்பு சொத்தாகக் கருதப்படாது என்று இந்தச் சட்டம் கூறுகிறது. இது அரசுக்கு சொத்துக்களை மறுவகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது.
"ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இஸ்லாமை பின்பற்றிய ஒரு நபர் மட்டுமே வக்பு அறிவிக்க முடியும்" என்று கட்டுப்படுத்துகிறது. இது முஸ்லிம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்புகளைச் செல்லாதது என்று ஆக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குகிறது.
இஸ்லாமிய மக்களில் இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்குத் தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
மாநில வக்பு வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் தேர்தல் முறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில வக்ஃபு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டுமென்று இந்தச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும்.
வக்பு சட்டத்தின் பிரிவு 40-ஐ நீக்குவது வக்பு வாரியத்தின் சொத்து அடையாள அதிகாரத்தை அகற்றி, அதை அரசுக்கு மாற்றுகிறது. இது அரசியலமைப்பின் பிரிவு 26-இன் கீழ் மத சுதந்திரத்தை மீறுவது ஆகும்.
"வக்பு பயனர்" (Waqf by user) என்ற பிரிவை நீக்கத் திட்டமிட்டுள்ளார்கள். நீண்டகாலப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துக்களை அங்கீகரிக்கும் பாரம்பரியத்தை இது அகற்றுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது.
"லிமிட்டேஷன் ஆக்ட்" என்று சொல்லப்படும் காலவரையறைச் சட்டம் வக்பு சொத்துகளுக்கும் பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அறநிலையங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்கள் இனி வக்பு என கருதப்பட மாட்டாது. இந்தப் பிரிவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை ஒன்றிய அரசு கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கவில்லை.
எனவே, வக்பு வாரிய சட்டத் திருத்தம் இது போன்று மோசமான விளைவுகளை ஏற்படுத்தகூடியதாகும்.
இந்த நிலையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறியது. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக மட்டும் வெளிநடப்பு செய்தது.