கச்சத்தீவை மீட்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவை திரும்ப பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். திமுக கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உட்பட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதை தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் அவைத் தலைவர் அப்பாவு, வாக்கெடுப்பு நடத்தி, இந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.