சென்னை:
மோட்டார் தொழிலையும், தொழிலாளர்களை யும் பாதுகாக்க பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி அரசு போக்குவரத்து, ஆட்டோ, சாலைப்போக்குவரத்து சம்மேளனங்கள் இணைந்து ஜூலை 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நீடித்து வரும் கொரோனா நோய்த்தொற்று மோட்டார் தொழிலை முற்றிலும் முடக்கிவிட்டது. 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் போடப்பட்ட ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் முழுமையாக இயங்கவில்லை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும், வாகனங்கள் அரைகுறையாகவே இயங்கின. ஊரடங்கு காரணமாக தொழிலே முடங்கியுள்ள நிலையில் தொழிலாளர்களும், வாகனஉரிமையாளர்களும் வருமானமின்றி தவிக்கின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுஎன்று எரியும் வாழ்க்கையில் எண்ணெய்யை ஊற்றி மேலும் நெருப்பை வளர்க்க வைக்கிறது ஒன்றிய அரசு. ஊரடங்கு காலத்தில் ஓடாத வாகனத்திற்கு இன்ஷூரன்ஸ், சாலைவரி கட்ட வேண்டும். எப்சி எடுக்க வேண்டும்.
அரைகுறையாக வாகனம் இயங்கும்போது டோல்கேட் கட்டண கொள்ளை என அடிமேல் அடிக்கிறது ஒன்றிய அரசு. பயணிகள் போக்குவரத்து, லாரி, ஆட்டோ, மேக்சி கேப், கால் டாக்ஸி, சிறிய சரக்கு வாகனம், பள்ளி வாகனம், பயிற்சிப் பள்ளிகள், இருசக்கர, நான்கு சக்கர, ஆறு சக்கர வாகன ஒர்க் ஷாப் என தமிழகத்தில் மட்டும் 25 லட்சம் மோட்டார் தொழிலாளர்கள் உள்ளனர். 25 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி, ஜூலை 6 அன்று மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.