திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் சிமெண்ட் சாலையைச் சரி செய்யக் கோரிக்கை
விழுப்புரம், ஜன.22- விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலம் ஊராட்சி ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு பகுதியில் சேதமடைந்துள்ள சிமெண்ட் சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது. திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஊராட்சியைச் சேர்ந்த கலைவாணர் நகர் அருகே உள்ள ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அதற்குள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து ஜல்லிக்கற்கள் வெளியே நீட்டிக்கொண்டுள்ளன. இதனால் அந்த வழி யாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் கார், இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளா கின்றனர். அந்த வழியாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜிப்மர் பகுதிகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் அதிக அள வில் ஸ்ரீராம் நகர் பகுதியில் வசிப்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இப்பாதையைப் பயன்படுத்துகின்றன. எனவே, 500 மீட்டர் தூரம் கொண்ட சேத மடைந்த சிமெண்ட் சாலையைப் போர்க்கால அடிப்படையில் திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற நிர்வாகம் புதிய சாலையாக அமைத்துத் தர வேண்டும் எனப் பொது மக்கள் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
