சென்னை,ஆக.09- தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங் கிணைப்பாளர்கள் பேரா. அருணன் மற்றும் க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அரசியல் நோக்கிலிருந்து குற்றங்கள் செய்து, அவற்றுக்காகப் பல்லாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்களை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யத்தான் அரசியல் சாசனத்தின் சரத்து 161-ல் மாநில ஆளுநருக்கும், குற்ற நடை முறைச் சட்டத்தின் சரத்து 432 “உரிய அரசாங்கத் திற்கும்” தேவையான அதிகாரங்களைத் தந்துள்ளது. இவற்றைப் பயன்படுத்தி மாநில அரசு, குற்றவாளிகளின் தண்டனைக் காலத்தைக் குறைத்து அவர்களை விடுதலை செய்யலாம். இந்தியாவில் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் எண்ணிக்கை மக்கள் தொகை யில் 14 சதவீதம். ஆனால் உயர்கல்வியில், அரசுப் பணிகளில், பொதுத்துறை நிறுவன வேலைகளில், தொழிலக நிர்வாகங்களில் அவர்கள் 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரைதான் உள்ளனர். மத்திய அரசு நியமித்த சச்சார் குழு தந்துள்ள விபரம் இது. நாடு சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் முடிந்த பிறகும் இந்த மக்களின் வாழ்நிலை இத்தகைய அவலத்தில்தான் உள்ளது. ஆனால் இந்தியச் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் மட்டும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
அரசுகள் இவர்கள்பால் காட்டும் ஒடுக்குமுறை மற்றும் ஓரவஞ்சனையை இது உணர்த்துகிறது. இதற்கெல்லாம் உச்சமென முஸ்லிம்கள் அதிகம் வாழும் காஷ்மீர் பள்ளத்தா க்கு ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையாக மோடி அரசால் மாற்றப்பட்டுள்ளது. வருடம் ஒன்று கடந்த பிறகும் காஷ்மீரிகள் இன்னும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவில்லை. தமிழகத்தின் சிறைச்சாலைகளும் முஸ்லிம் அரசியல் கைதிகளால் நிறைந்துள்ளன. பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தண்டனை அனு பவித்து வருகிறார்கள். இவர்களில் 37 பேர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள். இவர்களில் சிலர் 25 ஆண்டு களுக்கும் மேலாக உள்ளே இருக்கிறார்கள். இவர் களது இளமைக்காலம் எல்லாம் பாழாய்ப் போனது. வயது முதிர்ந்த தமது பெற்றோர்களைக்கூட இவர்களால் கவனிக்க முடியவில்லை. இவர்களது பிரிவால் நெடுங்காலமாய் வாடும் குடும்பத்தாரை மனதில் கொண்டாவது இவர்களை விடுதலை செய்ய வேண்டியது அவசர அவசியமாகும். குற்ற நடைமுறைச் சட்டத்தின் சரத்து 432-ன்படி தமிழக முதல்வர் இந்த முடிவை எடுக்க முடியும். அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. மேலும் தமிழகக் கைதிகள் தொடர்பான வழக்கு ஒன்றும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே அர சுக்கு தடைக்கற்கள் ஏதுமில்லை. இருந்தால் அது மனத்தடைதான். அதைக் கைவிட்டு, பத்தாண்டுகளுக்கும் அதிகமான சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்ட இந்த அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் முதல்வர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.