சென்னை:
பயணிகள் கூட்டம் இல்லாததால் திருச்சி-செங்கல்பட்டு சிறப்பு ரயில் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் சில ஊர்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. எனினும் கொரோனா பீதி, இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகளால் ரயிலில் பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. இதையடுத்து கீழ்கண்ட ரயில்களில் பெட்டிக்களின் எண்ணிக்கையை தெற்கு ரயில்வே குறைத்து உள்ளது.இதுகுறித்து ரயில்வே செய்திக்குறிப்பு வருமாறு:-
திருச்சி-நாகர்கோவில் (வண்டி எண்: 02627), நாகர்கோவில்-திருச்சி (02628) இடையிலான சிறப்பு ரெயில்களில் ஒரு ஏ.சி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 8 பொது வகுப்பு பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகள் என 19 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.பயணிகள் கூட்டம் இல்லாததால் தற்போது ஒரு ஏ.சி பெட்டி, 5 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 6 பொது வகுப்பு பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு பார்சல் பெட்டி என 14 பெட்டிகளாக குறைக்கப்பட்டு, வருகிற 21ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.இதேபோல் செங்கல்பட்டு-திருச்சி (06795), திருச்சி-செங்கல்பட்டு (06796) இடையிலான சிறப்பு ரயில்களில் ஜூன் 19 வெள்ளிக்கிழமை முதல், ஒரு முதல் வகுப்பு ஏ.சி பெட்டி, 2 இரண்டாம் வகுப்பு ஏ.சி பெட்டிகள், 2 மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் கொண்ட பெட்டிகள், 2 ஜெனரேட்டர் மற்றும் பார்சல் பெட்டிகள் என குறைத்த 16 பெட்டிகளுடன் இயக்கப்படும்.இவ்வாறு தெற்கு ரயில்வே கூறியுள்ளது.