சென்னை:
சமூகப்பாதுகாப்பு உதவித் தொகை பெற தமிழகத்தில் முதல் முறையாக மனநோய் மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு சமூகநலத்துறை அரசாணை-41 மற்றும், மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்ட விதிகளுக்கு விரோதமாக கடும் விதிமுறைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியதை கண்டித்து மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் புதன் கிழமை மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.போராட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு வார்த்தையில், தமிழகத்தில் முதல் முறையாக மனநோய் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சட்டம் அங்கீகரித்துள்ள 21 வகை மாற்றுத்திறனாளிகளும் சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை பெற ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என சமூகப்பாதுகாப்பு திட்ட இயக்குனர் வெங்கடாச்சலம் தெரிவித்தார். அதற்கான ஆதாரத்தையும் அவர் வெளியிட்டார்.
தமிழக அரசின் ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசாணை மற்றும் சட்டத்திற்கு விரோதமாக ஊனத்தின் சதவிகிதம் 60 விழுக்காடு என இருந்ததை 40 விழுக்காடாக மாற்றப் பட்டுள்ளது எனவும், இதற்கு வறுமைக்கோடு உள்ளிட்ட விதிமுறை இல்லை என்றும், அதே நேரத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 80விழுக்காட்டிற்கும் மேல் ஊனமுடைய மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் இந்திராகாந்தி ஓய்வூதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் அவர்கள் ஏற்கனவே வைத்துள்ள எந்த வங்கிக் கணக்கையும் பயன் படுத்தலாம் என்றும், இ-சேவை மையத்திற்கு செல்லாமல் பயனாளிகள் நேரடியாக ஆன் லைனில் விண்ணப்பிக்க வசதியாக சிட்டிசன் போர்ட்டல் (citizen portal) பத்து நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள வயது வரம்பு உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து அரசிடம் விளக்கம் பெற்று நடைமுறைப்படுத்த ஒரு மாத கால அவகாசம் கோரப்பட்டதை ஏற்று போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப் பேச்சுவார்த்தையில் மாற்றுத் திறனாளிகள் நல மாநில ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் உடன் இருந்தார்.
தடை இருந்தால் புகார் அளித்திடுக!
மன நோய் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட புதிதாக விண் ணப்பிக்கக்கூடிய பயனாளிகள் அரசின் இந்த அறிவிப்பை பயன் படுத்திடவும், இதில் ஏதேனும் சிரமங்கள், தடைகள் இருந்தால், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதோடு, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளிடமும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.இந்த தகவலை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.