அண்ணாநகர், மே 6-வில்லிவாக்கம் சிட்கோ நகரில் பல மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட மழைநீர் கால்வாய் பணிகள் இதுவரை முடியாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழை வெள்ளத்தின்போது சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், உடமைகளை இழந்து மக்கள் தவித்தனர். வெள்ள நீர் பல நாட்கள் வரை வடியாததால், இயல்பு நிலை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, தங்களது பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், கடந்த ஆண்டு இப்பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வந்தன. 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில், கால்வாய் பணி திடீரென கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட கம்பிகள் துருபிடித்து வீணாகி வருகிறது. அதுமட்டுமின்றி கம்பிகள் சாலையில் ஆபத்தான முறையில் நீட்டிக் கொண்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கால்வாய் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மழைநீர் கால்வாய் பணிகள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள்கால்வாய் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. கிடப்பில் உள்ளகால்வாய் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டால், முறையான பதில் அளிக்க மறுக்கின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள கால்வாய் பணியை விரைந்து முடிக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.