காஞ்சிபுரம்,ஏப்.22காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சிலவாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடந்தாண்டு பருவமழையின் பொழிவு குறைந்த காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இந்நிலையில் திங்களன்று காஞ்சிபுரத்தில் திடீரென்று பலத்த காற்று வீசியது. அதன்பின்னர் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. காஞ்சிபுரம், வாலாஜாபாத் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் காஞ்சிபுரம் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலையின் ஓரங்களில் இருந்த சில மரங்கள்முறிந்து விழுந்தன. இதனால் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.இதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வெப்பம் தணிந்தது. சென்னையில் திங்களன்று பிற்பகல் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழை வரும் என்று நகரவாசிகள் எதிர்பார்த்தனர். ஆனால் மாலை வரை மழை வரவில்லை.