tamilnadu

img

ஊரடங்கு நெருக்கடியைச் சமாளிக்க குடும்பத்துக்கு தலா ரூ.5,000 நிதியுதவி, உணவுப்பொருள் வழங்குக... முத்தரசன்

சென்னை:
ஊரடங்கு நெருக்கடியைச் சமாளிக்க குடும்பத்திற்கு தலா ரூபாய் 5,000 நிதியுதவி மற்றும் உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாயன்று (ஜூன் 30) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:“கொரோனா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடு முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டது. 70 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் முதல் தேதியில் இருந்து தளர்த்தப்பட்ட நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற ஜூலை 31 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா நோய் பெருந்தொற்று பரவல் தொடர்பாக கண்காணித்து வரும் 19 உறுப்பினர்கள் கொண்ட மருத்துவக் குழு ஊரடங்கு தொடர்வது மட்டுமே கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க போதுமானதல்ல என கருத்து தெரிவித்துள்ளது. அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்வது, நோய் தொற்று உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. மருத்துவர் குழு ஆலோசனைகளை அரசு அலட்சியம் செய்யாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு மருத்துவப் பரிசோதனைகளை விரிவுபடுத்த இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். ஜூலை மாதம் கொரோனா நோய் பெருந்தொற்று தாக்குதலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சமாக உயரும் என எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் ஆய்வறிக்கை ஏற்கெனவே எச்சரிக்கை செய்துள்ளது.இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள், சிறு சிறு சுயவேலை செய்து வருவோர் என அனைத்துத் தரப்பினர் குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 5,000 நிதியுதவி வழங்க அரசு அக்கறையோடு முயற்சி எடுக்க வேண்டும்.தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று அரசு அனுமதித்திருந்தாலும், பொதுப் போக்குவரத்து இயக்கம் இல்லாததால் தொழிலாளர்கள் வேலையிடம் வந்து செல்வதும், வேலையளிப்போர் உற்பத்திக்கான மூலப் பொருள்கள் வாங்குவதும் நடைமுறையில் மிகுந்த இடையூறுகளாக இருக்கின்றன.எனவே, வேலையிழந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் துயரங்கள் குறையவில்லை. மேலும், கொரோனா நோய் பெருந்தொற்று பரவல் தீவிரமாகி வருவதால் ஏற்படும் அச்சம் காரணமாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே இந்த சோதனையாக காலத்தை மக்கள் நம்பிக்கையோடு கடந்து செல்ல குடும்பத்திற்கு தலா ரூபாய் 5,000 நிதியுதவி மற்றும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான உணவுப் பொருள்களும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”.இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.