திருப்பூர்:
சமூக ஊடகத்தில் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், பெண் செயல்பாட்டாளர்கள் மீது விஷமத் தனமான பிரச்சாரம் மேற்கொள்ளும் காவி சமூக விரோதி களைக் கைது செய்ய வலியுறுத்திஆக. 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பாக கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருப்பூரில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்ட முடிவுகளை விளக்கி கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று பரவல் தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ரூ.25 லட்சம் வழங்கப்படும் எனக் குறிப் பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே முதல்வர் அறிவித்தபடி ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம், மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு குறித்து சமூக ஊடகங்களில் இழிவான அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்ட சமூக விரோத கும்பலைக் கைது செய்ய வேண்டும் என சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் ஜூலை 17, 20 தேதிகளில் புகார் மனு கொடுக் கப்பட்டது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் கண்டன அறிக்கையும் வெளியிட்டன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. எனவே
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி ஆத்திரமூட்டும் காவி சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தியும், மௌனமாக இருக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் ஆக. 18ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மேலும், சுதந்திர தின விழாவை ஆகஸ்ட் 15 அன்று மதச்சார்பின்மை, அரசமைப்புச் சட்டம் பாது காக்கும் விதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து கிளைகளும் விரிவாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் கொரோனா பொதுமுடக்க காலத்தில் மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்துவதைக் கண்டித்தும், மக்களுக்கு உரிய நிவாரண ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தியும் செப்டம் பர் 2, 3, 4 தேதிகளில் விழிப்புணர்வு பரப்புரை செய்வது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள் ளது. குறிப்பாக இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். இக்காலத்தில் போடப்பட்ட வழக்குகளை கைவிட வேண்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன்களை ரத்து செய்வதுடன், தொடர்ந்து தொழில் நடத்த நிபந்தனைகளைத் தளர்த்தி கடன் வழங்க வேண்டும். ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். நடுத்தரத் தொழில்களுக்கு வட்டி, கூட்டுவட்டி, அபராத வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களுக்கு அதிகரித்து ரூ.600 தின ஊதியம் வழங்குவதுடன், நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும். தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் வருமான வரி வரம்புக்குள் வராத குடும்பங்களுக்கு அரசு தாலிக்குத் தங்கம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பரப்புரை இயக்கம் நடத்தப்படும் என்று இரா.முத்தரசன் தெரிவித்தார்.இந்த சந்திப்பின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் கே.சுப்பராயன் எம்.பி., நிர்வாகக்குழு உறுப்பினர் நா.பெரியசாமி, மாவட்டச் செயலாளர் எம்.ரவி ஆகியோர் உடனிருந்தனர்.