tamilnadu

மாநில உரிமை மீது துல்லிய தாக்குதல் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

சென்னை, ஆக. 6- தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க.உதயகுமார் மற்றும் செயல்பாட்டுக்குழு உறுப்பினர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “பிரிவு 370ன் அடிப்படையில்தான் ஜம்மு-  காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தது. அந்தப்பிரிவை ரத்து செய்தி ருப்பது இணைப்பை கேள்விக்குறி யாக்க பிரிவினைவாதிகளுக்குஒரு காரணமாகிப் போகும். இதைச் சாக்கிட்டு காஷ்மீரில் தலையிடுமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடும் வேலையில் பாகிஸ்தானும் இறங்கக் கூடும். அந்த மாநில மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி யை இந்திய அரசு காப்பாற்ற வில்லை எனும் பெரும் பழிக்கு நமது நாடு ஆளாகிப் போகும், உலகத்தின் முன்பு நாம் தலைகுனிய வேண்டியிருக்கும். இதைஎல்லாம் கணக்கில் கொள்ளாமல் இந்த அநீதியைச் செய்திருக் கிறது மோடி அரசு” என்று சாடியுள்ளனர். இந்தியாவின் ஒருமைப்பாடு, அரசியல் சாசன அடித்தளம், ஜனநாயக நெறிமுறை, மாநில உரிமை, மத நல்லிணக்கம் எனும் அனைத்தின் மீதும் ஒருசேர துல்லியத் தாக்குதல் நடத்துவதாக உள்ளது மத்திய அரசின் இந்தச் செயல். இதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிப்பதோடு அதை எதிர்த்து ஒன்றுபட்ட இயக்கங்களை ஜனநாயக வழிமுறையில் நடத்துமாறு அனைத்து மனிதநேய உள்ளங்களையும் கேட்டுக் கொள்வதாகவும் அறிக்கையில் கூறியுள்ளனர்.