tamilnadu

அஞ்சல் துறை தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் தடை

சென்னை, ஜூலை 14 மத்திய அரசு நடத்தும் தபால்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என அவசர வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தபால் துறையில் அஞ்சலர் உள்பட 4 வகையான பணியிடங்களுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14)  நடைபெறுகின்றன. கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த தேர்வு தமிழ் உள்ளிட்ட 15 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டன. இந்நிலையில், தேர்வு நடைபெற 3 நாள்கள் இருந்த நிலையில், அதாவது ஜூலை 11-ஆம் தேதி தபால் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தபால் தேர்வுகள் `இந்தி மற்று ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்  ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர வழக்குத் தொடர்ந்தார். அதில், தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ள தால், தேர்வு எழுதுபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தேர்வு எழுதவுள்ள 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேர்வை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.      இந்த அவசர வழக்கு நீதிபதிகள் கே. ரவிச்சந்திரபாபு, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்வு நடைபெற அனுமதி அளித்தாலும் தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டனர். தேர்வு இரு மொழிகளில் மட்டும் நடத்தப்படுவது தொடர்பாக, மத்திய அரசு அறிக்கை அளிக்கவேண்டும் என நீதிபதிகள் கூறினர்.