சென்னை,டிசம்பர்.26- அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையின் செயல் அதிருப்தியளிப்பதாக சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று விசாரணை நடத்தப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தவழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களுடன் FIR வெளியிடப்பட்டது பின்பு கடும் எதிர்ப்பிற்குப் பிறகு FIR ஐ காவல்துறை முடக்கினர். இதனை காவல்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமை கண்டனத்துக்குரியது. உயர்கல்வி நிலையங்களில் கூட பாதுகாப்பில்லை. காவல்துறையின் அணுகுமுறை அதிருப்தியளிப்பதாக உள்ளது. பாதிக்கப்பட்டவர் குறித்த விவரங்கள் அடங்கிய FIR வெளியே வந்தது எப்படி? தவறு செய்த காவலர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.