சென்னை:
தொகுப்பூதிய ஊழியர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை அமல்படுத்தக்கோரி செவ்வாயன்று (ஜன.2) சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு வாரிய ஆணைப்படி ஊதியம்; சட்ட சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும், வருடக்கணக்கில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள ஓய்வுகாலப் பலன்களை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தலைவர்களுடன், அதிகாரிகள் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டம் தொடர்கிறது.
குடிநீர் விநியோகம் பாதிக்கும்
அப்போது சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குடிநீர்வடிகால் வாரியத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் தர வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வங்கி வாயிலாக தர வேண்டும். அடையாள அட்டை தர வேண்டும், 480 நாட்கள் பணியாற்றினால் அவர்களை சட்டப்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். காலதாமதம் செய்வதை ஏற்க முடியாது. அரசு கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிடில், தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கும் நிலை உருவாகும். அவ்வாறு நடந்தால் குடிநீர் விநியோகம் தடைபடும். எனவே, உடனடியாக பிரச்சனையை தீர்க்க வேண்டும்”என்று கூறினார்.
ஆணை கிடைக்காமல் செல்ல மாட்டோம்
மத்திய அமைப்பின் தலைவர் எம்.பாலகுமார் கூறுகையில், “1997ல் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் 1.8.2006 முதல் கொடுத்தார்கள். ஆனால் 1998 இல் இருந்து கொடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். அதை ஒப்பந்ததாரர்கள் குறைத்துக் கொடுகிறார்கள். வாரிய அதிகாரிகள் இதனை கண்காணிக்க மறுக்கிறார்கள். எனவே, ஊதியத்தை நிர்ணயித்தபடி வழங்க வேண்டும். தன்னிச்சையாக ஓய்வுக்கால பலன்களை நிறுத்தி வைத்துள்ளனர். ஒப்பந்த காலப் பலன்களை வாரியம் வழங்கவில்லை.
இவற்றிற்கு எதிராகவும் ஊழியர்களுக்கு சாதகமாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதை ஒரு வருடத்திற்கும் மேலாக வாரியம்நிறைவேற்றாமல் உள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறோம்”என்றார்.இந்தப்போராட்டத்தில் சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன், மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ஆத்மநாதன், பொருளாளர் வி.அழகுமலை உள்ளிட்டோர் பேசினர்.