சென்னை:
அண்ணா பல்கலைக்கழக பருவ (செமஸ்டர்) தேர்வுகள் வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை.
இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்கள் புதிதாக நிறுவனங்களில் பணிக்கு சேர வேண்டி இருப்பதால் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வினை வரும் ஜூலை மாத இறுதியில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.அதன்படி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே தேர்வெழுதும் முறையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் (சரியான விடைகளை) தேர்ந்தெடுத்து விடையளிக்கும் முறையில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கேற்ப வழக்கமாக நடக்கும் 3 மணி நேர கால அளவிற்கு பதில் தேர்வு நேரம் குறைக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கவில்லை. அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படாது என்றும் கொரோனோ தீவிரம் குறைந்தபின் அரசின் ஆலோசனை மற்றும் ஒப்புதலோடு அவர்களுக்கு நேரடியாக தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.