சென்னை:
வரைவே இறுதிப்படுத்தப்படாத புதிய கல்விக் கொள்கையைஉடனே அமல்படுத்தும்விதமாக, அரசுப் பள்ளிகளை மூடி, மத்திய பாஜக அரசுக்கு அடிமைச் சேவகம் செய்யும் அதிமுக அரசின் மோசமான நடவடிக்கையை இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு வன்மையாக கண்டித்துள்ளது.
இந்தியாவிலேயே பள்ளிக் கல்விக்கு நாங்கள் தான் கூடுதலான நிதி ஒதுக்குகிறோம், 16 வகையான இலவச பொருட்களை கொடுக்கின்றோம் என மார்தட்டிக் கொள்ளும் அதிமுக அரசின் கல்வித்துறை குறித்த சில விவரங்களை ஜூலை 16 அன்று ஊடகங்கள் வெளியிட்டன. குறிப்பாக கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 2, 47, 629 பேர் குறைவாக சேர்ந்துள்ளனர்.இதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1, 67,929 மாணவர்கள் குறைவாகசேர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4,17,558 மாணவர்கள் இந்தாண்டு குறைவாக சேர்ந்துள்ளனர் என விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என்றும், 2 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக சேர்ந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டதோடு, இன்னும் சில தினங்களில் புள்ளிவிவரங்களோடு அறிக்கை வெளியிடுகிறோம் எனக் கூறினார். ஆனால் அதேவேளையில், 10 மாணவர்களுக்கும் குறைவாக 1248 பள்ளிகள் உள்ளதாகவும், 45 பள்ளிகளில் மாணவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலை உள்ளது என்றும், ஆகவே இப்பள்ளிகளை நூலகங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என அவரே ஒப்புக்கொண்டு, ஆனால் பள்ளிகளை மூடி நூலகமாக மாற்றப்போகிறோம் என்றும் சொல்வது விநோதமானது என இந்திய மாணவர் சங்கம் கண்டித்துள்ளது. அதிகரிக்கும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பள்ளிகள் துவங்க வேண்டிய அரசு ஏற்கனவே இருக்கும் அரசுப் பள்ளிகளை மூடுவது திட்டமிட்ட சதியாகும் என்றும் சங்கம் சாடியுள்ளது.மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியில் ‘எண்ணிக்கை குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்களை மூடிவிட்டு, ஒருங்கிணைந்த பள்ளிக்கூடங்களாக மாற்றுவதோடு கட்டிடங்களை நூலகங்களாக, தொழிற் கூடங்களாக மாற்றுவோம்’ எனக் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மாணவர் சங்க மாநிலத்தலைவர் ஏ.டி.கண்ணன், செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர்,“மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கருத்துகேட்டுக் கொண்டிருக்கிற போதே தமிழக அரசு அமல்படுத்து வது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானசெயலாகும். ஆகவே தமிழக அரசு சட்ட விரோதமாக அரசுப் பள்ளிகளை மூடுவதை உடனே கைவிடுவதோடு, அரசுப் பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்து அப்பள்ளிகளை பாதுகாக்க கூடுதல் நிதியை ஒதுக்கி, ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பி அரசு அப்பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.