சென்னை:
பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் ஒரே நாடு ஒரே கார்டு திட்டம் தமிழ்நாட்டிற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (அக்.25)கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.சின்னதுரை பேசியதாவது:
கொரோனா பேரிடர் காலத்தில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு தவணைகளாக ரூ. 2000ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள் தொகுப்பை திமுக அரசு வழங்கியது மக்களுக்கு பேருதவியாக இருந்தது
சீரழிக்கும் பாஜக!
இந்திய ஒன்றிய அரசு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதில் “ஒரே நாடு, ஒரே கார்டு” என்ற திட்டம் பேராபத்தை ஏற்படுத்தி விடும். அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் நீக்கம் என்பது பொதுவிநியோக திட்டத்தை பெரிதும் பாதிக்கும். இதனால் கோடிக்கணக்கான ஏழை மக்கள் அவதிக்குள்ளாவார்கள்.நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைகளை வறுமை கோட்டிற்கு மேல் (ஏபிஎல்), வறுமைக் கோட்டிற்கு கீழ் (பிபிஎல்) என இரு கூறாக பிரிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் இது ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இதனை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஏழைகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அனைவரும் பயனடையக் கூடிய முறையில் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் .
அதிகாரிகளின் கவனக்குறைவு
புதிய குடும்ப அட்டை விண் ணப்பித்தால் 15 நாட்களில் புதிய அட்டை வழங்கப்படும் என அரசு அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. புதியதாக திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வெவ்வேறு தளத்தில் குடியிருப்போர், தனி பெண்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகள், வாடகை வீட்டில் குடியிருப்போர் ஆகியோர் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் கேட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர்.உதாரணம், பழைய கந்தர்வக் கோட்டையில் மணிகண்டன் என்பவர் உயிருடன் இருக்கிற போதே இறப்பு என்று ஆதார் அட்டை எண்ணை நீக்கிவிட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித பொருட்களும் ரேசன் கடையில் வாங்க முடியாமல் அந்த குடும்ப உறுப்பினர்கள் பரிதவிக்கின்றனர். குடும்ப அட்டை வழங்குவதில் அதிகாரிகளின் கவனக் குறைவை தவிர்க்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“மக்களை நோக்கி ரேசன்”
மலைவாழ் மக்கள் குடியிருக்கும் இடங்களில் அனைத்துப் பொருட்களும் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். மக்களை நோக்கி மருத்துவம் என்ற முறையில் மக்களை நோக்கி ரேசன் என திட்டமிட வேண்டும். ரேசன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும். ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் கிடைத்திடும் என்ற நம்பிக்கையில் தமிழக மக்கள் உள்ளனர் என்பதை முதலமைச்சருக்கு கவனப்படுத்துகிறேன்.
கடலை எண்ணெய் வழங்குக!
அரிசி அட்டைதாரர்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரை கிலோ சர்க்கரை என்பதை 1 கிலோவாகவும், உழைக்கும் மக்களின் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படாத வகையில் மானிய விலையில் கடலை எண்ணெய் குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் வழங்க முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.
ஊழியர்கள் பிரச்சனை
ரேசன் கடைகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அமுதம் ரேசன் கடை, கூட்டுறவு ரேசன் கடை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரி சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு ரேசன் கடைக்கும் ஒரு எடையாளர் கட்டாயம் நியமனம் செய்வது அவசியமாகும். கொரோனா காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு பணி வழங்க வேண்டும்.கூட்டுறவு நிறுவனங்களில் பணி வரன்முறைப்படுத்தாத 5313 ஊழியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக கூட்டுறவு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவில் 33 ஆண்டுகளாக சட்ட விதிகள் மாற்றப்படாததால் ஊழியர்கள் போனஸ் கூட பெற முடியவில்லை. வெறும் ரூ. 1,200 பெறும் அவலம் உள்ளது. இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களது ஊதிய ஒப்பந்தம் காலவதியாகியுள்ள நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். கூட்டுறவு ஊழியர்கள் அனைவருக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும். வேளாண்மை தொழிலை பாதுகாக்க கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் முழுவதையும் நிரப்ப வேண்டும்.
சிக்கன நாணய கூட்டுறவு சங்கம்
போக்குவரத்து சிக்கன நாணய கூட்டுறவு கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ. 89.57 கோடி நிலுவையில் உள்ளது. அந்நிதியை விடுவித்து போக்குவரத்து சிக்கன நாணய கூட்டுறவு சங்கங்களை பாதுகாக்க வேண்டும்.விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் நெல் கொள் முதல் செய்ய கூடுதலாக கிடங்கு வசதிகளை ஏற்படுத்தவும், நெல் உலர் களம், எதிர்கால உபயோகத்திற்காக தானியங்களை சேமித்து வைக்கும் காற்றுப் புகாத நவீன
தொழில்நுட்ப கிடங்குகள் அதிகரிக்க வேண்டும்.
வட்டிக்கொடுமை!
கந்து வட்டி, மீட்டர் வட்டி, மின்னல் வட்டி, ரன் வட்டி என பன்முக வட்டி கொடுமைகளிலிருந்து வேளாண்மை குடிமக்களை பாதுகாத்திடவும், சிறு-குறு, சாலையோர வியாபாரிகளை பாதுகாத்திடவும் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக தினசரி தவணை செலுத்தும் வகையில் கடன் வழங்கும் திட்டத்தை இக்கூட்டத் தொடரில் அறிவிப்பு செய்ய வேண்டும்.தரமான உணவு மற்றும் உணவு பண்டங்கள் கிடைக்க உணவு பரிசோதனை ஆய்வு மையம் நேர்மையாக செயல்படுவதை உறுதிபடுத்தி சந்தையில் தரமற்ற பொருட்கள் விற் பதை தடுக்க வேண்டும். எனது தொகுதிக்குட்பட்ட புனல் குளம் கிராமத்தில் நுகர் பொருள் வாணிபக் கழக கொள்முதல் கிடங்கு உள்ளது. அதனை நிர்வாக ரீதியாக தஞ்சை மாவட்டத்தில் வைத்திருக்கிறார்கள். அதனை பிரித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பிரித்து இடவேண்டும்.அரசுக்காக மக்களா? மக்களுக்காக அரசா? என்று மதிப்பீடு செய்கிற போது தமிழகத்தில் செயல் படுகிற நமது அரசு மக்களுக்கான அரசுதான் என்பது உறுதியாகிறது அதனை முதல்வர் உறுதிப்படுத்திட வேண்டும்.இவ்வாறு சின்னதுரை பேசினார்.