சிபிஎம் எச்சரிக்கை
புதுதில்லி, செப்.15- மத்திய அரசின் இந்தித் திணிப்பு அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, இந்தி தேசிய மொழியாகக் கருதப்பட வேண்டும் என்று அறிவித்திருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உணர்வுக்கும் நாட்டின் பல மொழிகள் இடையேயான ஒற்றுமைப் பண்புக்கும் எதிரானதாகும். அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான். அவை அனைத்தும் சமமாகத்தான் கருதப்பட வேண்டும். ஏதேனும் ஒரு மொழியை அம்மொழி பேசாத மற்ற மாநில மக்களிடம் திணிக்க முயன்றால், அது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் சீர்குலைவை ஏற்படுத்தவே இட்டுச் செல்லும்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சித்தாந்தமான ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்பதன் அடிப்படையில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இம்முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
(ந.நி.)