சென்னை:
மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 29 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் நீட் நுழைவுத்தேர்வு பாதிப்பில் இருந்து மாணவர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் முயற்சிக்கும் தமிழ்நாட்டுக்கு தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பிற்கும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 24 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சி.வி.எழிலரசன் எம்எல்ஏ, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் கல்விக்கான கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் கொடுத்தனர். மாணவர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் மனு ஒன்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாநிலச்செயலாளர் வீ.மாரியப்பன் வழங்கினார்.அம்மனுவில், கடந்த அதிமுக அரசு தமிழக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு துணைபோனது மட்டுமின்றி எதிர்த்து குரல் கொடுத்த தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் மீது பொய் வழக்குகளை புனைந்தது தாங்கள் அறிந்ததே. குறிப்பாக நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை, ஸ்டெர்லைட் பிரச்சனை, பேருந்து கட்டண உயர்வு, நெடுவாசல், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட தமிழகத்தின் பல எழுச்சிமிக்க போராட்டங்களில் மாணவர் அமைப்புகளும் முன்நின்றன.
குறிப்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் மீது மிகக்கொடுமையான பொய் வழக்குகளை புனைந்தது. கடந்த 2017 செப்டம்பர் மாதத்தில் நீட் எதிர்ப்பு மற்றும் சகோதரி அனிதாவுக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை, மதுரை , புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்களை ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு. 2018 ஜனவரியில் பேருந்து கட்டண உயர்வு போராட்டத்தின் போதும் இந்திய மாணவர் சங்கத்தினர் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆர்ப்பாட்டம், தர்ணா, பிரச்சாரம் என அனைத்து ஜனநாயக நடவடிக்கைகளின் போதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து மாணவர் அமைப்பினர் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.